Published : 15 Dec 2024 06:38 PM
Last Updated : 15 Dec 2024 06:38 PM
மதுரை: மதுரையில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் இரவு முழுவதும் மக்கள் தவித்தனர். கிருதுமால் நதி, கால்வாய்களை பொதுப்பணித்துறை தூர்வாராததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாடக்குளம் , அச்சம்பத்து, விராட்டிப்பத்து உள்ளிட்ட மேற்கு பகுதியிலுள்ள கண்மாய்கள் முழுவதும் நிரம்பி மறுகால் செல்லும் நிலை ஏற்படும்போது, உபரி நீர் கிருதுமால் நதிக்கு போகும் விதமாக உபரி நீர் கால்வாய்கள் உள்ளன. இது போன்று மதுரையில் பல இடங்களிலும் கிருதுமால் நதியை இணைக்கும் வகையில் கால்வாய் அமைப்புகள் இருக்கின்றன. இக்கால்வாய்களில் செல்லும் உபரி நீர் , கிருதுமால் நதியால் மதுரையின் கிழக்கு பகுதியிலுள்ள கண்மாய்களுக்கு கடத்தப்படுகிறது.
அந்த வகையில், மதுரையில் கடந்த சில தினமாக பெய்த தொடர் மழையால் மாடக்குளம், விராட்டிபத்து, அச்சம்பத்து உள்ளிட்ட கண்மாய்களில் மறுகால் செல்லும் வகையில் தண்ணீர் நிரம்பியது. இதன்படி, நேற்று முன்தினம் மாடக்குளம் கண்மாயில் இருந்து வெளியேறிய உபரி நீர், அன்னை ஸ்ரீ மீனாட்சி நகர் வழியாக செல்லும் 4 மற்றும் 6 நம்பர் கால்வாய்களில் தேங்கிய குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியாமல் அன்னை மீனாட்சி நகர், துரைசாமி நகர், ஜெயின்நகர் உள்ளிட்ட குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் வீட்டை வெளியேற முடியாமல் முடங்கினர்.
நேற்று முன்தினம் இரவில் கடைக்கு கூட, செல்ல முடியாமல் தவித்தனர். கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீரால் பாம்புகள், தேள் போன்ற விஷப்பூச்சிகளும் வீடுகளுக்குள் புகுந்து அச்சமடைந்தனர். குறிப்பாக தனிநபர்கள் கால்வாய்களை ஆக்கிமிரப்பு செய்திருப்பதால் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்தது என்றும், இதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மீனாட்சி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாடக்குளம், அச்சம்பத்து, விராட்டிபத்து பகுதியிலுள்ள கண்மாயில் இருந்து வெளியேறிய உபரி நீர் வழக்கத்தைவிட கூடுதலாக கிருதுமால் நதிக்கு சென்றது. இதன் காரணமாக கிருதுமால் நதி முறையாக தூர்வாரப்படாமலும், ஆங்காங்கே கழிவு குப்பைகள் அடைத்தும், சில இடத்தில் ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் போக வழியின்றி பொன்மேனி தானத்தவம் புதூர் பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் புகுந்தது. சுமார் 50 ஏக்கருக்கு மேல் நடவு செய்த வாழைப் பயிர்களும் சேதமடைந்தன.
வாழைத் தோட்டங்களில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாழை மரங்கள் ஒடிந்து விழுவதும், அழுகும் நிலையிலும் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் கிருதுமால் மற்றும் உபரி நீர் கால்வாய்களால் அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்த தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அன்னை மீனாட்சி நகர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்து, தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டார்.
பொதுமக்கள் கூறுகையில், “மழைக்காலத்திற்கு முன்கூட்டியே கிருதுமால்நதி, உபரி நீர் கால்வாய்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக தூரவாராததாலும், குப்பை அடைப்பாலும் விவசாயிகள், குடியிருப்புவாசிகள் பாதிக்கிறோம்.” என்றனர்.
மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் கூறுகையில், “மழைக்காலத்திற்கு முன்பு கிருதுமால் நதி, கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுத்தோம். நாங்களே தூர் வாரிக்கொள்கிறோம் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடிதம் கொடுத்து தூர்வாரும் பணியை நிறுத்தினர். ஆனால் இன்று நாங்கள் தான் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று, மக்கள் நலன் கருதி தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தோம்.” என்றார்.
உதவி செயற்பொறியாளர் சவுந்திரபாண்டி (குண்டாறு) கூறுகையில், “கிருதுமால் நதியை தூர்வார ஏற்கெனவே டெண்டர் விட்டோம். ஆனால், சில காரணத்தால் டெண்டர் ரத்தானது. தற்போது, ரூ. 7.5 கோடிக்கு மீண்டும் டெண்டர் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆட்சியர் உத்தரவின்பேரில் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டியுள்ள 7 கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment