Published : 15 Dec 2024 05:56 PM
Last Updated : 15 Dec 2024 05:56 PM
மதுரை: அலங்காநல்லூர் அருகே ஆதனூரில் விசிக கொடிக்கம்பம் அருகே கூடுதல் கட்டிடம் கட்டக்கூடாது என்ற வருவாய்த் துறை நோட்டீஸை கண்டித்து அக்கட்சியினர் போராட்டம் செய்தனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகிலுள்ள ஆதனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடி, கொடி மேடை,கட்சி விளம்பர பலகை கடந்த 25 ஆண்டாக இருக்கிறது. தற்போது அவ்விடத்தில் கொடிக்கம்பத்தை சுற்றிலும் கூடுதல் கட்டிடம் கட்ட அக்கட்சியினர் முயற்சித்தனர். இதற்கு வருவாய்த் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து, கிராம மந்தைப்புறம்போக்கு இடத்தில் கூடுதல் கட்டிடம் கட்டக்கூடாது என தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து விசிக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் முருகன், சேகர், கண்டிராஜன் உள்ளிட்டோருக்கு முடுவார்பட்டி வருவாய் ஆய்வாளர் அனுப்பிய எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றில், ‘அரசு விதிமுறைபடி, சொந்த பட்டா இடத்தில் மட்டுமே கட்சி கொடிக்கம்பம் அமைக்க, அனுமதி வழங்க வழிவகை உள்ளது.
ஏற்கெனவே விசிக கட்சி கொடிக்கம்பம் இருந்த இடத்தில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியை கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நிறுத்திய நிலையில், மீண்டும் அவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டிட பணியை நிறுத்தவேண்டும். மீறும் பட்சத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து செய்தமைக்கு தங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே அங்கு இருக்கும் கொடிக்கம்பமும் அகற்றப்படும்,’ என, குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வருவாய்துறையினர் நோட்டீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக மேற்கு மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் தலைமையில் 20 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கொடிக்கம்பம் பகுதியில் நேற்று திரண்டு தர்ணா போராட்டம் செய்தனர். வருவாய்த் துறையினர் அனுப்பி எச்சரிக்கை நோட்டீஸை திரும்பவேண்டும், ஏற்கெனவே கட்டியிருந்த கொடி மேடையை இடிக்கக்கூடாது என, கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் மலைச்சாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாவட்ட நிர்வாகம், ஆர்டிஓ-விடம் முறையாக அனுமதியை பெற்று, கட்டிடம் கட்டுங்கள் என, காவல் துறையினர் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து விசிகவினர் கலைந்து சென்றனர். வெளிச்சநத்தம் பகுதியில் விசிக கொடிக்கம்பம் பிரச்சினையில் 3 வருவாய்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ஆதனூர் கிராமத்திலும் விசிக கொடி மேடை பகுதியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT