Published : 15 Dec 2024 04:14 PM
Last Updated : 15 Dec 2024 04:14 PM
சென்னை: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுத்திட வேண்டும்’ என, இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாநில செயலாளர் பழ. ஆசைத் தம்பி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற ஜனநாயகத்தை நட்டாற்றில் தள்ளும் வகையிலும் கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும் மாநில உரிமைகளைப் மண் மேடாக்கும் வகையிலும், "ஒரே நாடு; ஒரே தேர்தல்" என்பதற்கான சட்ட முன்வரைவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தச் சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் டிச.16-ம் தேதியன்று தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. டிச. 16-ம் தேதி நிகழ்ச்சி நிரலில் இந்த மசோதா இடம் பெற்றிருந்த நிலையில், எதிர்கட்சிகளின் கடுமையான ஆட்சேபனையால் திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இடம் பெறவில்லை.
ஆனால், அதே சமயம் இந்த கூட்டத் தொடரிலேயே இம்மசேதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சட்ட முன்வரைவை அறிமுக நிலையிலேயே அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருசேர எதிர்க்க வேண்டியது அவசியமாகும்.
இந்தச் சட்டமுன்வரைவு நிறைவேற்ற வேண்டுமானால் அரசியல் சட்டத்தில் 6 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த அரசியல் சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டுமானால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை அவசியம். ஆனால், இரு அவைகளிலும் பாஜகவுக்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ அத்தகைய பெரும்பான்மை இல்லை. இது நன்றாகத் தெரிந்தும் இந்த சட்டமுன்வரைவை கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது.
வரும் 2029-ம் ஆண்டு முதல் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்படியானால், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பல மாநில அரசுகளைக் கலைக்க வேண்டியிருக்கும்.
மாநில சட்டப் பேரவைகளில் எந்த ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் மத்திய அரசே அந்த மாநில நிர்வாகத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்படும்.
அவசர கோலத்தில் அள்ளித் தெளிப்பது போல இந்தச் சட்டமுன்வரைவை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டியது கட்டாயமாகும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT