Published : 15 Dec 2024 08:56 AM
Last Updated : 15 Dec 2024 08:56 AM
சென்னை: தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு சார்பில் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பாக தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது.
தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் டி.குருசாமி முன்னிலையில், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்தை வலியுறுத்தும் விவசாயிகள் சங்க தேசிய தலைவர் வி.எம்.சிங் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் நீர்வள வல்லுநர்கள் பங்கேற்று விவாதித்தனர்.
கூட்ட முடிவில், வி.எம்.சிங் செய்தியாளர்களிடம் கூறியது: போதிய நீர் கிடைக்காததும், உற்பத்தி பொருளுக்கு நல்ல விலை கிடைக்காததும் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. இதற்கு உரிய தீர்வு காணும் நோக்கில், பல்வேறு மாநில விவசாயப் பிரதிநிதிகள் விவாதித்து இருக்கிறோம்.
இக்கூட்டத்தில், விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்தும் விதமாக தேசிய அளவில் சட்டம் இயற்றி, அதை மாநிலங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள 47 47 நதிப்படுகைகளை மேம்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் மன்னர் காலத்தில் இருந்து 39 ஆயிரம் ஏரிகளை மீட்டெடுத்து சுமார் 200 டிஎம்சி நீரை சேமிக்கும் பெருந்திட்டத்தை இந்த நிதியாண்டிலேயே அரசு செயல்படுத்த வேண்டும்.
அதேபோல், 100 நாள் வேலை திட்டத்தை திருத்தி, அப்பணி யாளர்களை வேளாண் பணி மற்றும் நிலத்தடிநீர் மேலாண்மை பணிகளில் ஈடுபடுத்த அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதை முன்னெடுக்க தமிழக சிவில் சமூக அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். அதில் 140 பொதுக்குழு உறுப்பினர்களும், 25 செயற்குழு உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை அரசிடமும், அரசியல்வாதியிடமும் வலியுறுத்துவதை விடுத்து, விவசாயிகளே அதை செயல்படுத்தும் அதிகாரத்தை பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் விவாதித்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மகாராஷ்டிர மாநில கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜு ஷெட்டி, தேசிய விவசாயிகள் சங்க தலைவர் சஞ்சய்நாத் சிங், பாரதிய கிசான் யூனியன் தலைவர் பல்ராஜ் பாட்டீல், மகளிரணி தலைவி ரேகா சிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT