Published : 15 Dec 2024 12:41 AM
Last Updated : 15 Dec 2024 12:41 AM
சிவகாசி: அசோகரின் பிராமி எழுத்துகளில் இருந்துதான் தமிழ் வந்தது என்ற கோட்பாட்டை உடைத்து, தனக்கென்று தனி மொழி நடை, எழுத்து நடையைக் கொண்டிருக்கிற மொழி தமிழ் என்பதை தொல்லியல் ஆய்வுகள் அறிவியல் பூர்வீகமாக நிரூபித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கியக் கழகம் சார்பில் சிவகாசியில் 2-வது கரிசல் திருவிழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கரிசல் இலக்கியக் கழகச் செயலாளர் மருத்துவர் அறம் வரவேற்றார்.
விழாவில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: இலக்கண வளர்ச்சியும், இலக்கியச் செழுமையும் கொண்ட மொழி தமிழ். அசோகர் காலத்துக்கு 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தனக்கென தனி எழுத்து முறையைப் பெற்ற இனம் தமிழ் இனம்.
அசோகரின் பிராமி எழுத்துகளில் இருந்துதான் தமிழ் வந்தது என்ற கோட்பாட்டை உடைத்து, தனக்கென்று தனி மொழி நடை, எழுத்து நடையை கொண்டிருக்கிற மொழி தமிழ் என்பதை தொல்லியல் ஆய்வுகள் அறிவியல் பூர்வீகமாக நிரூபித்துள்ளன. அறிஞர்கள் மட்டுமின்றி, மண்பாண்டத் தொழிலாளிகூட எழுத்தறிவு பெற்றிருந்த சமூகமாக தமிழ்ச் சமூகம் திகழ்ந்துள்ளது.
கரிசல் மண்ணில் உருவாகிய இலக்கிய மரபை தொடர்ந்து கொண்டாடி வருகிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பே பட்டாசு, தீப்பெட்டி, அச்சு என தொழில்களை உருவாக்கி வெற்றி கண்டது கரிசல் பூமி.
தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் இலக்கிய விழாக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. சாகித்திய அகாடமி விருது பெற்றவர்களுக்கு கனவு இல்லம், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா, பொருநை, வைகை, காவிரி இலக்கியத் திருவிழாக்கள் வரிசையில், தற்போது நிலம் சார்ந்த விழாவாக கரிசல் இலக்கிய விழா நடக்கிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேசும்போது, "கரிசல் இலக்கியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வவே இந்த விழா நடத்தப்படுகிறது" என்றார். விழாவில், கரிசல் கதைகள், கவிதைகள், சொலவடைகள், விடுகதைகள், நாட்டார் கதைகள் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
சிலப்பதிகாரம் முற்றோதல் செய்த அரசுப் பள்ளி மாணவிகள் வீரசெல்வி, சந்தனவேணி ஆகியோருக்கு அமெரிக்க இலக்கிய ஆர்வலர் வைதேகி கெர்பார்ட் வழங்கிய ஊக்கத்தொகையை அமைச்சர் வழங்கிநார். விழாவில், மேயர் சங்கீதா, எம்எல்ஏ ரகுராமன், சார் ஆட்சியர் பிரியா, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், சொ.தர்மன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காணொலி வாயிலாக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பேசும்போது, "இந்த திருவிழா எழுத்தாளர்களைக் கொண்டாடுவதுடன், புதிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களை உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT