Published : 15 Dec 2024 12:01 AM
Last Updated : 15 Dec 2024 12:01 AM
புதுச்சேரி: இந்திய அரசியலமைப்பு ஏற்பின் 75-வது ஆண்டு விழா மற்றும் சட்ட நாள் விழா புதுச்சேரியில் 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் சனிக்கிழமை (டிச.14) நடைபெற்றது. புதுச்சேரி சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கலந்து கொண்டார்.
மேலும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பரமணியன், விஜயகுமார், ஷமீம் அகமது, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த், புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் நாராயணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேசியதாவது: உலகில் பல நாடுகள் தங்களது அரசியல் சாசனப் பார்வையை மாற்றி வருகின்றன. ஆனால், கிறிஸ்து பிறப்புக்கு ஆயிரமாண்டுக்கு முன்பே மானுட சமுதாயத்தை சீர்படுத்தவும், மக்கள் வாழ்க்கை தரத்தை சிறந்ததாக மாற்ற வேண்டும்.
மக்கள் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு தங்களது உரிமையை உணர்ந்து வாழவேண்டும் என்ற சித்தாந்தம் கிறிஸ்து பிறப்புக்கு ஆயிரமாண்டுக்கு முன்பே உலகம் கண்டுள்ளது. இந்தியாவின் வேத காலத்தில் தொடங்குகிறது. தர்மசாஸ்திரம் சட்ட அறிவு பரந்துபட்டுள்ளது. தமிழகத்தில் அறம் என்ற சித்தாந்தம் சிறந்ததாக உலகுக்கே உன்னதத்தை காட்டியுள்ளது.
சாணக்கியருடைய அர்த்த சாஸ்திரத்திலும் மனு நீதியிலும் மனித வாழ்க்கை எந்த விதத்தில் அமைய வேண்டும் என்ற குறிப்புகள் எழுந்து நிற்கின்றன. தமிழகத்தில் அறம் கூறும் நான்கு அவையங்களாக இருந்துள்ளன.
மக்கள் சமத்துவம் அறியும் சித்தாந்தங்களை தமிழகத்தின் படைப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. நீதி சார்ந்து மக்கள் வாழ்க்கை எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதை வேதகாலம் மற்றும் தமிழகத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
12-வது நூற்றாண்டில் தோன்றிய கம்பன் மனிதர்கள் ஒழுக்கமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்று சொன்னதால்தான் கவிச்சக்கரவர்த்தி என்ற புகழை பெற்றார். ஒரு குற்றம் மன்னர்கள் முன்பு கொண்டு வந்து வைக்கப்பட்டால், அந்த குற்றம் சார்ந்த விஷயங்களை எப்படி பகுத்து பார்க்க வேண்டும் என்று அறிந்தவர்களாக இருந்தார்கள்.
அமைச்சர்களுக்கு அறிவுரை சொல்வது இந்த காலக்கட்டத்தில் சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் சங்ககாலப் பாடல்கள் தவழ்ந்த காலக்கட்டத்தில் புலவர்கள், மன்னர்கள் முன்பு நின்று அறத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும். சட்டத்தை எடுத்துச் செல்ல வேண்டும். மக்களிடையே அரசாட்சி எந்தவித பாகுபாடும் இல்லாமல் எப்படி எழுந்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.
சிறைச்சாலைகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்ற கேள்விகள் எழுப்பப்பட்ட போது மணிமேகலையில் சிறைச்சாலைகள் அறச்சாலைகளாக மாற்றப்பட வேண்டும் என்ற பாடல் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு இந்தியாவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தண்டனை விதிக்கப்படாத கைதிகளின் வாழ்க்கையை எப்படி அமைக்க வேண்டும் என்ற முக்கிய கருத்து அதிகளவில் உள்ளது விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விஷயங்களை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து பார்த்திருக்கின்றனர் இந்த மண்ணைச் சார்ந்தவர்கள்.
இப்படி உலகம் சார்ந்த விதத்தில் மனிதர்களை நெறிமுறைப்படுத்த வேண்டும் என்ற சித்தாந்தத்தில் உருவானது தான் சட்ட வரைவுகள். இதனைத்தான் 75 ஆண்டுகளாக நம் மண்ணினுடைய அரசியல் சாசனத்தின் மூலம் நாம் வலியுறுத்துகிறோம்.
கடந்த 75 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படும் அரசியல் சாசனம் 120 மாற்றங்களை சந்தித்த பின்னாலும் நிலைத்து நிற்கிறது. ஆகவே அரசியல் சாசனத்தை கட்டிக்காப்பது அனைவரது கடமையாகும். தனிமனித உரிமை, சுதந்திரத்தை அது காப்பதாக உள்ளது. அதற்கு விரைவான நீதி கிடைக்க வேண்டியது அவசியம் என்றார்.
துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், பேசும்போது, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்துக்கு நமது அரசியலமைப்பு சான்றாக உள்ளது. இது நமது தேசத்தின் அடையாளம். நீதியை மதிக்கும், சமத்துவத்தை ஊக்குவிக்கும் மற்றும் ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் தேசத்தை உருவாக்க பாடுபட வேண்டும்.
நமது சமுதாயத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்த ஆவணத்தைப் பாராட்டவும், பாதுகாக்கவும் இளைய தலைமுறைக்கு கற்பிக்க வேண்டும். என்றார். முதல்வர் ரங்கசாமி பேசுகையில், புதுச்சேரி சட்டக்கல்லூரியில் படித்து இன்று சிறந்த வழக்கறிஞர்களாக பணியாற்றி வருவது பெருமை. சிறந்த நீதிபதிகளின் தீர்ப்புகளை இளம் வழக்கறிஞர்கள் தினமும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் சிறந்த வழக்கறிஞர்களாக வரவும், வளரவும் முடியும்.
மக்கள் எதிர்பார்ப்பது விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான். விரைவான தீர்ப்பு ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்த சட்ட நாளில் நான் கேட்டுக்கொள்வது வழக்கறிஞர்கள் விரைவாக வழக்காடி, வழக்குகளை முடித்து நல்ல தீர்ப்பை வாங்கிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT