Published : 14 Dec 2024 11:01 PM
Last Updated : 14 Dec 2024 11:01 PM
அவிநாசி: சேவூர் அருகே கானூரில் முஹம்மத் ஷா வலியுல்லா தர்காவில் மத நல்லிணக்கம் போற்றும் வகையில் கார்த்திகை தீப வழிபாடு நடைபெற்றது.
அவிநாசி வட்டம், சேவூர் அருகே கானூர் ஊராட்சி உள்ளது. இங்கு தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலியுல்லா தர்கா, தமிழகத்தில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். இந்த தர்கா தமிழ்நாடு வக்பு வாரியத்தினால் இணைக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு உருஷ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த சந்தனக்கூடு உருஷ் விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, சத்தி, மேட்டுப்பாளையம், சென்னை, மைசூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து சிறப்பு தொழுகையில் கலந்து கொள்வார்கள். மேலும் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தர்காவுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
கார்த்திகை தீபம்: இந்நிலையில், கார்த்திகை தீப திருநாளான நேற்று (வெள்ளிக்கிழமை) அப்பகுதி கிராம மக்கள் தர்காவில் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதுகுறித்து தர்கா ஹஜ்ரத் சம்சுதீன் கூறுகையில், தொழில் விருத்தி, திருமணம், குழந்தை பாக்கியம் என எந்தவொரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதால் இந்த தர்காவுக்கு சாதி, மதம், இனம் பாராமல் அனைத்து தரப்பு மக்களும் இங்கு வருகிறார்கள்.
மேலும், கார்த்திகை தீபத்தின் போது இப்பகுதியில் உள்ள மக்கள் இங்கு வந்து கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆண்டுதோறும் வழக்கமாக கொண்டுள்ளனர். மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக இந்த தர்கா விளங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு உரூஸ் விழாவில் அனைத்து தரப்பு மக்களும் வருகை தந்து வழிபட்டு செல்கின்றனர் என கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT