Published : 14 Dec 2024 08:54 PM
Last Updated : 14 Dec 2024 08:54 PM
ராமேசுவரம்: வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் கனமழையால் கடந்த 5 நாட்களாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில், நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 471 விசைப்படகுகள் நேற்று மீன்பிடிக்கச் சென்றன.
இந்நிலையில், மணிவண்ணன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 7 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கரையிலிருந்து 2 நாட்டிக்கல் மைல் தொலைவு சென்றபோது, திடீரென பலகை உடைந்து, படகுக்குள் தண்ணீர் புகுந்தது. உடனடியாக, மீனவர்கள் செல்போன் மூலம் கரையில் இருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, நாட்டுப் படகில் சென்ற மீனவர்கள் விசைப்படகில் இருந்த ஆறுமுகம், குமார், முருகன், சேதுபதி, மாதவன், கண்ணன், ஜஸ்டின் ஆகிய 7 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு, கரைக்கு அழைத்து வந்தனர். விசைப்படகு கடலில் மூழ்கியதால், அதை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டனர். கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தவறாது பாதுகாப்பு உபகரணங்கள், தக்க ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என்று மீன்வளத் துறை உதவி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT