Published : 14 Dec 2024 08:41 PM
Last Updated : 14 Dec 2024 08:41 PM
கடலூர்: “ஓட்டு கேட்கும்போது தேவைப்படும் கூட்டணி கட்சித் தலைவர்கள், தேர்தல் முடிந்தவுடன் ‘ப்ரோடோகால்’ என ஒதுக்கப்படுகின்றனர். இதற்கெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர்வினையாற்றுவார்கள்” என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வேல்முருகன் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எப்போதெல்லாம் தமிழகத்தில் பேரிடர் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் பாதிக்கப்படும் இடம் கடலூர். சாத்தனூர் அணை திறப்பால் எனது தொகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் குடும்ப அட்டைக்கு வெறும் ரூ.2 ஆயிரம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதையும் மாவட்டம் முழுவதும் வழங்கப்படவில்லை.
கடந்த 2001-ம் ஆண்டு முதல் பேரிடரால் பாதிக்கப்படும் ஒவ்வொரு முறையும் மக்களிடமும் ஆறுதல்தான் தெரிவிக்க முடிகிறது. நான் கோரிக்கை தான் வைக்க முடியும். அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும். துணை முதல்வர் உதயநிதி கடலூர் மாவட்டத்துக்கு வரும்போது, பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வேண்டுகோள் வைத்தேன். ஆனால் அவர் வந்து பார்வையிடவில்லை. எம்எல்ஏவாக தனிப்பட்ட முறையில் எவ்வளவு மக்களுக்கு சொந்தச் செலவில் உதவ முடியும்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கி பிச்சை போடுகின்றனர்? மது குடித்து உயிரிழந்தால் ரூ.10 லட்சம் அரசு வழங்குகிறது.
ஆட்சி முடிந்தால் மக்களை சந்திக்க வந்துதான் ஆக வேண்டும். தேர்தலின்போது முதல்வருடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அமர வைப்பவர்கள். தேர்தல் முடிந்தவுடன் ‘ப்ரோடோகால்’ காரணம் காட்டி புறம்தள்ளுகிறார்கள். இதற்கெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர்வினையாற்றுவார்கள். அரசின் நிர்வாகத்திறன் இன்மையால் மக்கள் உயிர் பலியாகின்றனர். அதிகாரிகள் செய்யும் தவறுகள் முதல்வருக்கு தெரிகிறதா? இல்லையா? ஊழலுக்கு துணைபோகும் அதிகாரிகளை தமிழக முதல்வர் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இல்லையெனில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மக்களை திரட்டி பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT