Published : 14 Dec 2024 07:03 PM
Last Updated : 14 Dec 2024 07:03 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வெள்ளநீரை தடுப்பதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்குவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் சந்திப்பு பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரை இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்ட இடங்களை தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் இன்று 2-வது நாளாக பார்வையிட்டு ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: ''திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாநகராட்சியில் சந்திப்பு பேருந்து நிலையத்தில் நிரந்தரமாக வெள்ளநீரை தடுப்பதற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்குவதற்கு அலுவலர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இப்பேருந்து நிலையத்தில் நீர் செல்லும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 ராட்சத மின்மோட்டார்கள் கொண்டு வரப்பட்டு நீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கூடல் பாபநாசம் ஆலங்குளம் சாலையிலும் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரிசெய்திட தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நெற்பயிர், வாழை, பிற தானியங்கள் சேதங்கள் குறித்து கணக்கீடு செய்யப்பட்டு கணக்கீடு நிறைவு பெற்றபின் தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று தேவையான நிவாரணம் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.'' இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து வெள்ளநீரில் மக்கள் சிக்கிக்கொண்டால் அவர்களை மீட்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி வர்த்தக மையத்தில் 6 நாட்டு படகு, தண்ணீரை வெளியேற்றும் மோட்டார்களுடன் 50 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளதை அமைச்சர் பார்வையிட்டார். சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்வதையும், சேவியர் காலனியில் பாதிக்கப்பட்ட இடங்களில் இயந்திரங்கள் மூலம் மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, அப்துல்வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் என்.ஒ. சுகபுத்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT