Last Updated : 14 Dec, 2024 06:19 PM

 

Published : 14 Dec 2024 06:19 PM
Last Updated : 14 Dec 2024 06:19 PM

சாயல்குடி அருகே சாலை துண்டிப்பால் 10 கிராமங்கள் பாதிப்பு - அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள் 

சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி- கொண்டுநல்லான்பட்டி செல்லும் சாலையில் ஓடும் காட்டாற்று வெள்ளம்.

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே சாலை துண்டிப்பால் 10 கிராமங்கள் பாதிப்பு அடைந்துள்ளதால் அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

சாயல்குடி, கமுதி பகுதிகளில் காட்டாற்று வெள்ளத்தால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர். இப்பகுதிகளில் 15 ஆயிரம் ஏக்கர் மிளகாய், மல்லி, வெங்காயம், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக மாவட்டத்திலுள்ள கண்மாய், குளம், பண்ணை குட்டை போன்ற நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. கமுதி தாலுகாவில் உள்ள 38 பொதுப் பணித்துறை கண்மாய்கள் 60 சதவீதம் நிரம்பியுள்ளன. சாயல்குடி அருகே கொக்கரசன்கோட்டை, கொண்டுநல்லான்பட்டி, வாலம்பட்டி, உச்சிநத்தம், முத்துராமலிங்கபுரம், வெள்ளையாபுரம், பிச்சையாபுரம், டி.கரிசல்குளம், டி.எம்.கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.

எஸ்.தரைக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த மாவட்ட வருவாய் அலுவலரை முற்றுகையிட்டு, குறைகளை தெரிவித்த கிராம மக்கள்.

இந்நிலையில், இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழைக்கு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த லட்சுமிபுரம், மாவிலோடை கண்மாய்களில் தண்ணீர் பெருகியும், நீர்வழித் தடங்களில் தண்ணீர் நிரம்பி அது வெளியேறி காட்டாறு வெள்ளமாக கஞ்சம்பட்டி ஓடையில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வி.சேதுராஜபுரத்திலிருந்து உச்சிநத்தம் செல்லும் சாலை, தரைக்குடியில் இருந்து கொண்டு நல்லான் பட்டி செல்லும் சாலை, முத்துராமலிங்கபுரம் செல்லும் சாலை, செவல்பட்டி செல்லும் சாலையில் நேற்று முன்தினம் முதல் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து வசதியின்றி வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இதேபோன்று இப்பகுதியிலுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள 15 ஆயிரம் ஏக்கர் மிளகாய், உளுந்து, மல்லி, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. இதம்பாடல், திருஉத்தரகோசமங்கை , முதுகுளத்தூர் அருகே உடையநாதபுரம் , சாம்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. சேதமடைந்த பயிர்களுக்கு மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாடானை தாலுகா திருவெற்றியூர் பகுதியில் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்.

இதேபோல் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுக்காக்களில் பயிரிடப்பட்டிருந்த குறுகிய கால நெல் பயிர்கள் இன்னும் 10 முதல் 15 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருந்தன. இதில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேலான பயிர்கள் தொடர் மழையால் நீரில் மூழ்கி உள்ளன. எனவே நீரில் மூழ்கி சேதமடைந்த நெல் பயிர்களை வேளாண்மைத்துறையினர் கணக்கெடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், எஸ்.தரைக்குடி பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ரா.கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று பார்வையிட்டனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்த நிலையில், அதிகாரிகளை அப்பகுதி கிராம மக்கள், முற்றுகையிட்டு இரண்டு நாட்களாக எவ்வித உதவிகள் இன்றி தவித்து வருகின்றோம். அரசு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அடுத்த சில நிமிடத்தில் எஸ்.தரைக்குடி பகுதிக்கு வந்த ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து கார் செல்ல முடியாததால் டிராக்டரில் அமர்ந்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x