Published : 14 Dec 2024 04:05 PM
Last Updated : 14 Dec 2024 04:05 PM
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருக்கிறது. துணைவேந்தர் பொறுப்புக்குழுதான் இப்போது பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் பொறுப்புக்குழு உறுப்பினர்களுக்கும், பதிவாளருக்கும் இடையே கருத்தொற்றுமை இல்லாத தால் பல்கலைக்கழக நிர்வாகம் ஸ்தம்பித்துக் கிடப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 133 அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு துணைவேந்தராக இருந்த காளிராஜ் 2022 அக்டோபரில் ஓய்வு பெற்றார். அதன் பிறகு புதிய துணைவேந்தர் நியமிக்கப்படாததால் கடந்த 2 ஆண்டுகளாக பல்கலைக்கழக நிர்வாகத்தை, துணைவேந்தர் பொறுப்புக்குழு நிர்வகித்து வருகிறது.
மூன்று பேரைக் கொண்ட இந்தப் பொறுப்புக் குழுவுக்கு உயர் கல்வித்துறை முதன்மைச் செயலர் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். பதிவாளராக (பொறுப்பு) ரூபா குணசீலன் இருந்து வருகிறார். இந்த நிலையில், பொறுப்புக்குழு உறுப்பினர்களுக்கும் பதிவாளருக்கும் இடையே நிர்வாக ரீதியிலான முடிவுகளை எடுப்பதில் பல குழப்பங்கள் நிலவி வருவதாகச் சொல்லப்படுகிறது.
தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், அவரவர்க்கு வேண்டப்பட்டவர்களுக்கு சாதகமாக விதிகளை மீறி செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலர் மற்றும் துறை அமைச்சர் ஆகியோரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்கிறார்கள்.
இதுகுறித்து பேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பி.திருநாவுக்கரசு, "நான்கு ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. மீண்டும் தேர்தல் நடத்தி புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர்கள் தரப்பில் நிரப்பப்பட வேண்டிய 4 ஆட்சி குழு உறுப்பினர்கள் இடம் வெகு நாட்களாக காலியாக உள்ளது. இதை நிரப்புவதற்கும் பொறுப்புக்குழு குழு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பதிவாளர், தேர்வாணையர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கோப்புகள் தூங்குகின்றன.
இது போன்ற நிர்வாக செயல்பாடுகளில் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இடையே உள்ள பதவி போட்டிகளால் முடிவெடுக்க முடியாமல் கால தாமதம் ஏற்படுகிறது. கோப்புகள் தொடர்பாக முடிவெடுப்பதிலும் சிக்கல் உருவாகிறது. இதையெல்லாம் பொறுப்புக்குழு ஒருங்கிணைப்பாளராக உள்ள உயர் கல்வித்துறை முதன்மைச் செயலர் தான் பொறுப்புக்குழு உறுப்பினர்களுடன் கலந்துபேசி தீர்வுகாண வேண்டும்" என்றார்.
பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ரூபா குணசீலனிடம் இதுகுறித்து கேட்டதற்கு, "பல்கலைக்கழகத்தில் ஏராளமான கல்வி வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘நாக்’ தரவரிசைப் பட்டியலில் பாரதியார் பல்கலைக்கழகம் 44-வது இடத்தில் உள்ளது. தினமும் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சுமார் 100 அவுட்ரீச் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். புதிய கண்டுபிடிப்புகளுக்கென 27 காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. சுமார் 500-க்கும் மேற்பட்ட கோப்புகளில் நான் கையெழுத்துப் போட்டுள்ளேன். ஏதாவது ஒரு துறையில் சில குறைகள், தவறுகள் இருந்தாலும் நிர்வாகத்தை தேக்கமின்றி கொண்டு செலுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.
துணைவேந்தர் என்ற ஒற்றை மனிதர் இருந்திருந்தால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழ வாய்ப்பில்லை. அத்தகைய பொறுப்பு மிக்க பதவியை 2 ஆண்டுகளாக காலியாக வைத்திருப்பது சரியான நவடிக்கை இல்லை. எனவே, ஆளுநரும் அரசும் உடனடியாக துணைவேந்தரை நியமனம் செய்து பல்கலைக்கழக நிர்வாக குளறுபடிகளை சரிசெய்யட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT