Last Updated : 14 Dec, 2024 03:54 PM

 

Published : 14 Dec 2024 03:54 PM
Last Updated : 14 Dec 2024 03:54 PM

தென்காசி மாவட்டத்தில் 3-வது நாளாக மழை நீடிப்பு: கடனாநதி அணையில் 260 மி.மீ. பதிவு

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்றும் (டிச.14) பரவலாக மழை நீடித்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கடனாநதி அணையில் 260 மி.மீ. மழை பதிவானது.

3வது நாளாக தொடரும் கனமழை: தென்காசி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை காலை 5 மணியில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 10 மணி வரை தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், அதன் பின்னர் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடனாநதி அணையில் 260 மி.மீ. மழை பதிவானது. ராமநதி அணையில் 154 மி.மீ., செங்கோட்டையில் 140 மி.மீ., குண்டாறு அணையில் 138 மி.மீ., கருப்பாநதி அணையில் 90 மி.மீ., தென்காசியில் 58 மி.மீ., ஆய்க்குடியில் 55 மி.மீ., சிவகிரியில் 53 மி.மீ., அடவிநயினார் அணையில் 38 மி.மீ., சங்கரன்கோவிலில் 22 மி.மீ. மழை பதிவானது.

சராசரியாக 100.83 மி.மீ. மழை: மாவட்டத்தில் சராசரியாக 100.83 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் 80 அடியிலும், 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் 79 அடியிலும், 72.10 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.59 அடியிலும் நிலைநிறுத்தப்பட்டு, இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே உபரியாக திறந்துவிடப்படுகிறது.

நிரம்பாத அணைகள்... கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 11,434 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 500 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 1200 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 275 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 4 அணைகள் நிரம்பிவிட்ட நிலையில் அடவிநயினார் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்யாததால் இந்த அணை இன்னும் நிரம்பாமல் உள்ளது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் 83 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 132 கனஅடி நீர் வந்தது. 10 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: மழையில் வீடு இடிந்து 2 ஆண்கள், ஒரு பெண் காயமடைந்தனர். மழையில் 10 குடிசை வீடுகள் இடிந்து சேதமடைந்தன. 51 குடிசை வீடுகள் உட்பட 53 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. 2 மாடுகள், ஒரு ஆடு உயிரிழந்துள்ளன. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. பாதுகாப்பு கருதி அருவி அருகில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x