Published : 14 Dec 2024 10:37 AM
Last Updated : 14 Dec 2024 10:37 AM
மயிலாடுதுறை/ காரைக்கால்/ நாகப்பட்டினம்/ திருவாரூர்: மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகை மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் குடியிருப்புகள், விளைநிலங்களில் நேற்று வெள்ளம் சூழ்ந்தது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், பொறையாறு உள்ளிட்ட பகுதிகளிலும், சுற்று வட்டார கிராமங்களிலும் குடியிருப்புகள், கடைவீதிகள், தாழ்வான இடங்கள் உள்ளிட்டவை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அனந்தமங்கலம் ஓடக்கரைத் தெருவில் உள்ள ரெத்தின குமாரின் கான்கிரீட் வீடு கனமழை காரணமாக நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதில், அங்குகட்டி வைக்கப்பட்டிருந்த 4 ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன. பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டு, நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழைநீரை வடியச் செய்வதற்கான பணிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் நேற்று மதியம்2.30 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): மயிலாடுதுறை 232.50, செம்பனார் கோவில் 194, மணல்மேடு 182.40, தரங்கம்பாடி 141.30, சீர்காழி 103.60, கொள்ளிடம் 90.80.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக கனமழை பெய்தது. பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகள், விளை நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டிருந்த 10 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன என விவசாயிகள் கூறுகின்றனர். நேற்று காலை 8 மணி வரை காரைக்காலில் 203 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நாகை மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும் காற்றுடன் கனமழை பெய்தது. பல்வேறு தாழ்வான குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீருடன் புதை சாக்கடை கழிவுநீரும் கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். திருமருகல் ஒன்றியத்தில் உள்ள திருச்செங்காட்டங்குடி மேலத்தெருவைச் சேர்ந்த பாக்கியம்(60) என்பவரது வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கூரத்தாழ் வார்குடியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. பாவாட்டக்குடி, கொல்லுமாங்குடியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள அரசுப் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாவாட்டக்குடி மற்றும் கூரத்தாழ்வார்குடியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment