Published : 14 Dec 2024 10:29 AM
Last Updated : 14 Dec 2024 10:29 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், நிலக்கடலை, வாழைகள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4 நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று மாலை வரை இடைவிடாது மழை பெய்து கொண்டே இருந்தது. மழையின் காரணமாக மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், பள்ளி மாணவர்களுக்கு நேற்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நிலக்கடலை விதை அழுகல்: திருவோணம் வட்டாரத்தில் சிவ விடுதி, ஊரணிபுரம் பகுதிகளிலும், தஞ்சாவூர் வட்டாரம் குருங்குளம், மருங்குளம், வடக்குப்பட்டு, நாஞ்சிக்கோட்டை, வேங்கராயன் குடிக்காடு பகுதிகளிலும் கார்த்திகை மாத பட்டத்தில் விதைக்கப்பட்ட நிலக்கடலை வயல்களில் மழைநீர் தேங்கியதால், 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நிலக்கடலை விதைகள் முளைவிடும் பருவத்தில் அழுகியுள்ளன.
சம்பா நெற்பயிர் சேதம்: மாவட்டத்தில் சூரக்கோட்டை, நாய்க்கன்கோட்டை, காசவளநாடு, தெக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் முன்பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தொடர்மழை காரணமாக வயலில் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி பகுதியில் கோணக்கடுங்காலாற்றில் நேற்று உடைப்பு ஏற்பட்டது.
இதனால், வெளியேறிய வெள்ளநீர் புகுந்ததில் அப்பகுதியில் 1,000 ஏக்கருக்கு மேல் நடவு செய்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் மற்றும் வாழைகள் நீரில் மூழ்கின. மேலும், ஐம்பதுமேல் நகரம், திட்டை, அம்மாப்பேட்டை, நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பின்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற் பயிர்களும் மழைநீரில் மூழ்கியுள்ளன.
வாழைகள் பாதிப்பு: திருவையாறு பகுதியில் வளப்பக்குடி, திருவையாறு, ஆச்சனூர், பாபநாசம் பகுதிகளில் வாழை பயிரிட்ட வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நீர் தொடர்ந்து தோட்டங்களில் நின்றால் வேர் அழுகல் நோய் தாக்கும் அபாயம் உள்ளது.
வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக கள்ளபெரம்பூர் 2-ம் சேத்தி உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் மழையின் காரணமாக ஒரேநாளில் 24 கூரை வீடுகள், 13 ஓட்டு வீடுகள் என 37 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 7 கால்நடைகளும் உயிரிழந்து உள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): திருவிடைமருதூர் 196, மஞ்சளாறு 191, கும்பகோணம் 179, அணைக்கரை 168, பாபநாசம், அய்யம்பேட்டை தலா 124, பூதலூர் 115, திருக்காட்டுப்பள்ளி 85, திருவையாறு 78, கல்லணை 62, பட்டுக்கோட்டை 58, ஒரத்தநாடு 55, ஈச்சன்விடுதி 46, அதிராம்பட்டினம் 43, குருங்குளம், வெட்டிக்காடு, நெய்வாசல் தென்பாதி தலா 37, தஞ்சாவூர் 35, வல்லம் 21, மதுக்கூர் 20, பேராவூரணி 17.
கும்பகோணத்தில்.. திருவிடைமருதூர் வட்டம் வேலூர் ஊராட்சி நல்லதாடி, காளியம்மன்கோயில் தெரு, மடப்புரம் பகுதிகளின் அருகில் உள்ள வயலில் தேங்கிய மழைநீர் வடிவதற்கு போதிய வசதி இல்லாததால் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால், அந்தப் பகுதிகளில் வசித்த 200 குடும்பத்தினர் மேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கும்பகோணம்- திருவையாறு சாலை கணபதியக்ரஹாரம் பிரதானச் சாலையில் 50 ஆண்டுகள் பழமையான மாமரம் வேருடன் முறிந்து சாலையில் விழுந்தது.
நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறையினர் அந்த மாமரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல, பாபநாசம்- சாலியமங்கலம் பிரதானச் சாலை குப்பைமேடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களின் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், அவர்கள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்ப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், துணை மேயர் சு.ப.தமிழழகன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு, மழைநீர் வடிய தேவையான பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். மாநகராட்சி ஆணையர் ஆர்.லட்சுமணன் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT