Published : 14 Dec 2024 09:52 AM
Last Updated : 14 Dec 2024 09:52 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை சரிவர மேற்கொள்ளாததால் கடந்த ஆண்டைப்போலவே தற்போதும் முக்கிய சாலைகள், கடைவீதிகள், கோயில்கள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள ஊத்து பகுதியில் 540 மி.மீ. மழை பெய்திருந்தது.
மற்ற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):அம்பாசமுத்திரம்- 366, கன்னடியன் அணைக்கட்டு- 351, காக்காச்சி- 350, மாஞ்சோலை- 320, நாலுமுக்கு- 310, மணிமுத்தாறு- 298, பாளையங்கோட்டை- 261, சேர்வலாறு அணை- 237, சேரன்மகாதேவி- 225, பாபநாசம்- 221, களக்காடு- 155, திருநெல்வேலி- 132, நாங்குநேரி- 110, மூலைக்கரைப்பட்டி- 84, கொடுமுடியாறு அணை- 74, நம்பியாறு அணை- 53, ராதாபுரம்- 33.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 76.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 6,426 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 623 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 87.28 அடியாக இருந்தது. அணைக்கு 6,656 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 17 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
மாநகரில் வெள்ளம்: கனமழையின் காரணமாக கால்வாய் களில் தண்ணீர் பெருக்கெடுத்ததை அடுத்து, திருநெல்வேலி மாநகரில் தெற்கு புறவழிச் சாலை, சந்திப்பு பேருந்து நிலையம், ரயில்வே பீடர் சாலை, அண்ணா சாலை, திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோயில் தெரு, செண்பகம்பிள்ளை தெரு, ஜவஹர்லால் தெரு, வழுக்கோடை அருகேயுள்ள கருணாநிதி தெரு, கல்லணை பள்ளி அருகேயுள்ள தெருக்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியது.
இதனால், இப்பகுதி குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டனர். டவுன் ஜவஹர் பள்ளிக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்குள்ள பொருட்கள் சேதமடைந்திருந்தன. டவுன் காட்சி மண்டபம் பகுதியில் தேங்கிய தண்ணீரை வடியவைக்கும் பணிகளை மேயர் கோ.ராமகிருஷ்ணன் முடுக்கி விட்டார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் விடுத்துள்ள அறிக்கையில், ‘பல்வேறு அரசு துறை அலுவலர்கள் அவ்வப்போது வழங்கும் எச்சரிக்கைகளை ஏற்று நடக்கவும், கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்கவும், வீடுகளில் போதிய அளவு குடிநீர் மற்றும் அவசரகால பயன்பாட்டுப் பொருட்கள், தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யவும் வேண்டும். கரையோரம் உள்ள பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயில், மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி போன்ற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்கு செல்லவும், அங்குள்ள நீர்நிலைகளில் குளிக்கவும், வனத்துறை தடை விதித்தது. மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், உவரி, இடிந்தகரை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதனால், 1500 -க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடற்கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. திருநெல்வேலியில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நேற்று காலை வரையில் 5 நிவாரண முகாம்களில் 156 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னேற்பாடுகளில் தொய்வு: திருநெல்வேலியில் பருவ மழை முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப் படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதற்காக பல்வேறு ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன. ஆங்காங்கே பணிகளும் நடைபெற்றன. ஆனால் மழைநீர் ஓடைகளும், கால்வாய்களும் மராமத்து செய்யப்படாமலும், தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும் உள்ளதை கடந்த சில வாரங்களுக்குமுன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் புகைப்படங்களுடன் சுட்டிக் காட்டியிருந்தது.
இந்நிலையில், ஒரு நாள் மழைக்கே திருநெல்வேலி தாக்குப்பிடிக்காமல் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் பெய்த அதி கன மழையின் போது தண்ணீர் தேங்கிய அதே பகுதிகள், தற்போது மீண்டும் தண்ணீரில் தத்தளிக்கின்றன.
திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து கட்டியிருக்கும் நிலையில், தற்போதைய மழையில் பேருந்து நிலையத்தை தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. ஆய்வு என்ற பெயரில் அமைச்சரும், மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் இந்த பகுதிகளை பார்வையிட்டுச் செல்கிறார்கள். ஆனால், நிரந்தர தீர்வுக்கு வழி காணப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ் சாட்டுகிறார்கள்.
பதற்றத்தை உருவாக்கிய சமூக ஊடகங்கள்: திருநெல்வேலியில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் பெய்த அதிகன மழையின் போது தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளம், மாநகரில் தண்ணீர் சூழ்ந்திருந்த காட்சிகளை, சிலர் சமூக ஊடகங்களில் நேற்று மீண்டும் பதிவிட்டு, அவை நேற்று நிகழ்ந்ததாக தெரிவித்து பதற்றத்தை அதிகரித்தனர். இந்த காட்சிகளையும், புகைப்படங்களையும் வெளியூர் நபர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உள்ளூர்வாசிகளிடம் விசாரித்துக் கொண்டே இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT