Published : 14 Dec 2024 06:25 AM
Last Updated : 14 Dec 2024 06:25 AM

பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம்: விநியோகிக்கப்பட்ட குடிநீரில் இரண்டு வகை பாக்டீரியாக்கள் - அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: பல்லாவரம் பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அந்த குடிநீரை ஆய்வு செய்ததில் இரண்டு வகையான பாக்டீரியாக்கள் அதில் இருப்பது தெரியவந்திருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை அடுத்த பல்லாவரம் பகுதியில் கடந்த 4-ம் தேதி கழிவு நீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 5-ம் தேதி அந்த குடிநீரை குடித்த பலருக்கு வாந்தி, பேதி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.

பாதிக்கப்பட்டவர்கள், தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழக அரசு சார்பில், அப்பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கிண்டி கிங் ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் தமிழக பாஜக தலைவர்கள் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நலம் விசாரித்த நிலையில், பாஜக சார்பிலும் குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையிலேயே ஒரு தனியார் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, ஆய்வக முடிவுகள் வந்ததும், அதனை வெளியிடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அந்தவகையில், நேற்று ஆய்வக முடிவை வெளியிட்ட அண்ணாமலை, குடிநீரில் இரண்டு வகையான பாக்டீரியாக்கள் கலந்து இருப்பதாகவும், அதனால், உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:

கடந்த, டிசம்பர் 5-ம் தேதி, சென்னை பல்லாவரத்தில், குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், மூன்று பேர் உயிரிழந்ததும், 20-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதுமான துயர சம்பவம் நடந்தது. அமைச்சர் தா.மோ.அன்பரசன், குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றும், பொதுமக்கள் தவறினால்தான் பாதிப்பு ஏற்பட்டது என்றும், பொதுமக்கள் மீது குற்றம் சுமத்தினார்.

அந்தப் பகுதியில் அன்றைய தினங்களில் வழங்கப்பட்ட குடிநீரைப் பரிசோதனைக்கு அனுப்பி, அதன் முடிவுகள் கிடைத்துள்ளன. குடிநீரில், ‘கோலிஃபார்ம் மற்றும் ஈ கோலி’, ஆகிய பாக்டீரியாக்கள் இருக்கக் கூடாது என்பது, சென்னைப் பெருநகர குடிநீர் வாரியத்தின் தரக் கட்டுப்பாடுகளில் ஒன்று. ஆனால், பல்லாவரம் பகுதியில் வழங்கப்பட்ட குடிநீரில் இந்த இரண்டு பாக்டீரியாக்களும் இருப்பது, சோதனை முடிவில் வெளிப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில், பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்கும்போது, அடிப்படை சோதனைகளைக் கூட மேற்கொள்ளாமல், தங்கள் நிர்வாகத் தோல்வியை, தவறுகளை மறைத்து, அதிகாரத் திமிரின் உச்சத்தில், பொதுமக்களைக் குற்றவாளியாக்க முயன்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன், குடிநீரில் கழிவுநீர் கலந்ததன் காரணமாகப் பறிபோன மூன்று உயிர்களுக்கு என்ன பதில் கூறுவார்? இவ்வாறு அதில் கூறியியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x