Published : 14 Dec 2024 12:53 AM
Last Updated : 14 Dec 2024 12:53 AM
திண்டுக்கல்: தீ விபத்து நேரிட்ட திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தடயவியல் நிபுணர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டுக்கல்லில் உள்ள சிட்டி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் என்ஜிஓ காலனியைச் சேர்ந்த ராஜசேகர் (36), அவரது மகள் கோபிகா (6), பாலதிருப்பதி மணிமுருகன் (30), அவரது தாயார் மாரியம்மாள் (50), தேனி மாவட்டம் சீலம்பட்டி சுருளி (50), அவரது மனைவி சுப்புலட்சுமி (45) ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், மதுரை தடயவியல் துறை துணை இயக்குநர் காஜாமைதீன் தலைமையிலான குழுவினர் நேற்று மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். ரூ.3 லட்சம் நிவாரணம் விபத்தில் காயமடைந்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மின் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டுள்ளது. முதல்வர் அறிவித்தபடி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம், பலத்த காயமடைந்த 4 பேருக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்த 31 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
தலைவர்கள் இரங்கல்: திண்டுக்கல் மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனைகளில் உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT