Published : 13 Dec 2024 10:06 PM
Last Updated : 13 Dec 2024 10:06 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் ஆக்கிரமிப்புகளின் காரணமாகவே மழைநீர் தேங்கி வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தார்.
திருநெல்வேலியில் பெய்த கனமழையால் மாநகரில் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. இந்நிலையில் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு மழை நீர் தேங்கிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஆய்வு மேற்கொண்டார். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய பகுதியில் தேங்கியிருந்த மழைநீரை பார்வையிட்ட அவர், வருங்காலங்களில் பேருந்து நிலையம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மழைநீர் வடிகால் பகுதிகளை சீரமைப்பது, வடிகால் அமைப்பது தொடர்பான பல்வேறு அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு வழங்கினார்.
அங்கு கட்டிட ஆக்கிரமிப்புகளின் காரணமாகவே மழை வெள்ளம் தேங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: திருநெல்வேலியில் மழைநீர் வடிகாலின் இருபுறமும் கரைகள் கட்டி தண்ணீர் எளிதில் செல்லும்படியான திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் காரணமாகவே மழை நீர் தேங்கி வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதை அடுத்து அவற்றை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் தொடங்கியுள்ளார். ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு இருக்கும் இடங்களாக கண்டறியப்பட்ட 3 இடங்களில் பொதுமக்கள் தங்குவதற்கான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பச்சை ஆற்றில் இருந்து தண்ணீர் வெள்ளநீர் கால்வாய் வழியாக வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது தாமிரபரணியில் 65 ஆயிரம் கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. பொதுமக்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது. நீர் வழி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதை தொடர்ந்து திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள நெல்லை கால்வாய் , திருப்பணி கரிசல்குளம், முக்கூடல் பகுதியில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்கள் போன்ற இடங்களை அமைச்சர் ஆய்வு செய்தார்.
தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு, அப்துல்வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT