Published : 13 Dec 2024 08:52 PM
Last Updated : 13 Dec 2024 08:52 PM
நாகர்கோவில்: குமரி மலையோரங்களில் பெய்த மழையால் மோதிரமலை - குற்றியாறு இணைப்பு தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் இழுத்து சென்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குமரி மாவட்டத்தில் மழை இன்றி வெயில் அடிக்காமல் மேகமூட்டத்துடன் கூடிய தட்பவெப்பம் நிலவி வருகிறது. அதே நேரம் இன்று பேச்சிப்பாறை மற்றும் பாலமோரில் கனமழை பெய்தது. பேச்சிப்பாறையில் 53 மிமீ., மழையும், பாலமோரில் 18 மிமீ., மழையும் பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பெய்த மழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஏற்கனவே தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மோதிரமலை - குற்றியாறை மலை கிராமங்களை இணைக்கும் தரைப்பாலம் தற்காலிகமாக மக்கள் செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மோதிரமலை - குற்றியாறு பாலப்பணிக்காக கட்டுமான பொருட்கள் கரையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. காட்டாற்று வெள்ளத்தால் தற்காலிக தரைப்பாலம், மற்றும் கரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுமான பொருட்கள் ஆகியவற்றை வெள்ளம் அடித்து சென்றது. இதில் தற்காலிக பாலம் உடைந்து மோதிரமலை, குற்றியாறுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதியடைந்தனர்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 41.39 அடியாக இருந்தது. அணைக்கு 2045 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. அணையில் இருந்து 516 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 57.25 அடியாக உள்ளது. அணைக்கு 392 கனஅடி தண்ணீர் வருகிறது. எந்நேரமும் கனமழை பெய்தால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறந்து விட வாய்ப்புள்ளது. இதனால் அணை பகுதியை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT