Published : 13 Dec 2024 04:57 PM
Last Updated : 13 Dec 2024 04:57 PM
சொந்தமாக ஒரு உணவகத்தை கூட நடத்தாத ஒரு நிறுவனத்தால் இன்று உணவு டெலிவரி செய்ய முடிகிறது. சொந்தமாக ஒரு தங்கும் விடுதி கூட வைத்திராத ஒரு நிறுவனத்தால், தேசிய அளவில் தங்கும் விடுதி முன்பதிவு செய்து வழங்கும் சேவையை வழங்க முடிகிறது.
இச்சேவைகள் அனைத்தும் நாம் யாரையும் நாடி செல்லாமல், நம் கைக்குள்ளேயே ஸ்மார்ட் போன்கள் வடிவில், இணையதளம் வழியாக நொடிப்பொழுதில் பெற முடிகிறது. இதற்கு தொழில்நுட்ப வளரச்சி தான் முக்கிய காரணம். உலக அளவில் நடந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனின் வாழ்வியலை வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொழில்நுட்பம் வழியாக தான் தற்போது அடித்தட்டு மக்களின் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் பைக் டாக்சி வந்திருக்கிறது.
இதுநாள் வரை குறைந்தபட்சம் 4 பேர் பயணிக்கும் கார் சேவை, 3 பேர் பயணிக்கும் ஆட்டோ சேவைகள் அமலில் இருந்தன. ஒரு நபர் பயணிப்பதாக இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டி இருந்தது. இந்நிலையில் ஒரு நபர் பயணிக்க ஏதுவாக, அவர்களின் செலவை குறைக்கும் வகையில், சென்னையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் தனியார் நிறுவனத்தால் பைக் டாக்சி சேவை தொடங்கப்பட்டது.
இதையடுத்து, பல்வேறு நிறுவனங்களும் பைக் டாக்சி சேவைகளை வழங்கி வருகின்றன. ஒரு நபர் பயணிப்பதால் கார்கள், ஆட்டோக்கள் சாலையை அடைத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்கும் வகையிலும் இந்த சேவை உள்ளது. குறைவான கட்டணம், சாலையில் நெரிசல் இருந்தால், சந்து பொந்துக்களில் எளிதில் நுழைந்து, விரைவாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடிந்ததால், இந்த சேவை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், பயன்படுத்துவோர் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வணிக ரீதியில் பைக்குகளை பயன்படுத்துவதில் உள்ள பாதகங்களை குறிப்பிட்டு, அந்த சேவையை முறைப்படுத்த அரசு முற்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் சார்ந்த இந்த சேவையை, வாக்கு வங்கி மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக அரசு முடக்கிவிடுமோ என பைக் டாக்சி சேவையால் பயன்பெற்ற பொதுமக்கள் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஐடி ஊழியர் சுரேஷ் கூறுகையில், “பைக் டாக்சியில் மிகக் குறைந்த அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அத்துடன் விரைவாக வந்து ‘பிக்அப்’ செய்கிறார்கள். பெரும்பாலும் பயணத்தை ரத்து செய்வதில்லை” என்றார்.
தொழில்முனைவோர் வி.பிரேமலதா கூறுகையில், “அவசர தேவைக்கு பயனுள்ளதாக இருக்கிறது. பெண்கள் அச்சமின்றி பைக் டாக்சியில் பயணிக்க நிறைய பெண் ஓட்டுநர்கள் வர வேண்டும். ஹெல்மெட்டை பலரும் பயன்படுத்துவதால் ஹெல்மெட்கள் பராமரிப்பின்றி இருக்கிறது” என்று தெரிவித்தார்.
தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர் வீர.சோழன் கூறும்போது, “நான் பணிக்கு செல்லவோ, பணி முடிந்து வீடு திரும்பவோ பைக் டாக்சியை பயன்படுத்தினால் எனக்கு தலா ரூ.40 மட்டுமே செலவாகிறது. ஷேர் ஆட்டோவில் பயணித்தால் ரூ.20 தான் செலவாகும். ஆனால், அலுவலகத்திலிருந்து ஷேர் ஆட்டோ இயக்குமிடம் வரையும், பிரதான சாலையில் இறங்கி வீடு வரையும் நடந்து செல்ல வேண்டும்.
இதுவே பைக் டாக்சியில் பயணித்தால் வீட்டு வாசலிலேயே இறங்கி விடலாம். வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், இது ஒரு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக மாறி வருகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக உயர்கல்வி பயிலச் செல்ல முடியாத மாணவர்கள், பகுதி நேரமாக பைக் டாக்சியில் பணிபுரிவதால் உயர்கல்வியை தொடர முடிகிறது. அதனால் இந்த சேவை தொடர வேண்டும்” என்றார்.
வங்கி ஊழியர் வி.சசிதரன் தெரிவிக்கையில், “பைக் என்பதால் போக்குவரத்து நெரிசல் உட்பட சிக்கலான நேரங்களிலும் விரைந்து செல்ல வேண்டிய இடத்துக்கு சென்றுவிடலாம். ஒருவர் மட்டும் செல்ல ஆட்டோ, கார் எடுப்பதற்கு பதிலாக பைக் டாக்சி சிறந்த தேர்வு” என்றார்.
தனியார் நிறுவன ஊழியர் பி.ரோகிணி கூறும்போது, “பெண்களுக்கான பிங்க் பைக்கில் பெண் ஓட்டுநர்கள் வருகிறார்கள். ட்ராக் செய்வது போன்ற பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருந்தபோதும் ஆண் ஓட்டுநர்கள் வரும்போது, சிறிய நெருடலுடனேயே பயணிக்கிறோம். பெண்களுக்கான பாதுகாப்பை மட்டும் உறுதிப்படுத்தினால், பைக் டாக்சி சேவை தவிர்க்க முடியாததாக மாறிவிடும்” என்றார்.
பகுதி நேர பணி: பைக் டாக்சி ஓட்டுநராக பணிபுரியும் கோமதிநாயகம் கூறும்போது, “நான் 6 மாதங்களுக்கு மேலாக பைக் டாக்சி ஓட்டி வருகிறேன். தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் நிலையில், பகுதி நேரமாக ஓட்டி நாள் ஒன்றுக்கு ரூ.300 வரை சம்பாதிக்க முடிகிறது. இதுவே முழுநேரமாக ஓட்டினால் ரூ.1000 வரை சம்பாதிக்க முடியும். மேலும், எனக்கான காப்பீடு, இணையவழியில் மருத்துவ ஆலோசனை போன்றவையும் நிறுவனம் வழங்குகிறது’’ என்றார்.
டிச.18-ல் வேலைநிறுத்தம்: இதுகுறித்து தமிழக ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில செயல் தலைவர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: பைக் டாக்சிக்கு அனுமதி அளிப்பது முறையாகாது. இது மோட்டார் வாகன சட்டத்துக்கு புறம்பானது. பைக் டாக்சிக்கு அனுமதி கொடுப்பதன் மூலமாக, பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக போக்குவரத்து அமைச்சர் செயல்படுகிறார். தொழிலாளர்கள் மத்தியில் மோதல் போக்கு இல்லாமல் இருக்க வேண்டும். அதை அமைச்சர் செய்யவில்லை. எனவே, பைக் டாக்சியை தடை செய்ய கோரி டிச.18-ம் தேதி வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: பைக் டாக்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவற்றைத் தடுக்கக் கூடாது என நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள், ‘கிக்’ எனப்படும் இணையம் சார்ந்த தொழில் வரம்புக்குள் இடம்பெறுவர்.
சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்த முடியாது என்ற அடிப்படையில் இதில் பயணிப்போருக்கு காப்பீடு பெற முடியாத சூழல் இருக்கிறது. எனவே, மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி தமிழக போக்குவரத்து துறையும் வழிகாட்டுதல்களை உருவாக்கி அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இதுகுறித்து அரசு விரைவில் உத்தரவு பிறப்பிக்கும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT