Published : 13 Dec 2024 04:19 PM
Last Updated : 13 Dec 2024 04:19 PM
சென்னை: தெற்கு அந்தமான் கடற்பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதைத் தொடர்ந்து வருகின்ற 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, வரும் டிச.17 மற்றும் 18-ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 29 இடங்களில் அதி கனமழையும், 81 இடங்களில் மிக கனமழையும், 168 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது.
அடுத்த வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில், தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்கள், மத்திய மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் அநேக இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும், நெல்லை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் ஏனைய தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
நாளை (டிச.14) தெற்கு அந்தமான் கடற்பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதைத் தொடர்ந்து வருகின்ற 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, வரும் டிச.17 மற்றும் 18-ம் தேதிகளில், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
இன்று குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்றானது மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் வரும் டிச.15 முதல் டிச.17ம் தேதிகளில் அந்தமான் கடற்பகுதி, தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்.1 முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில், பதிவான மழையின் அளவு 54 செ.மீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பளவு 40 செ.மீ. இது இயல்பை விட 32 சதவீதம் அதிகம்.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும், 22 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 13 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் மழை பதிவாகியுள்ளது. நேற்று வரை இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக இருந்தது. இன்று ஒரே நாளில் 32 சதவீதம் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது. கிட்டத்தட்ட 16 சதவீதம் ஒரே நாளில் பரவலாக மழை பெய்துள்ளதால், இயல்பளவு அதிகரித்துள்ளது,” என்று அவர் கூறினார். | வாசிக்க > உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் டிச.16 - 18 மீண்டும் கனமழை வாய்ப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT