Published : 13 Dec 2024 04:11 PM
Last Updated : 13 Dec 2024 04:11 PM
“காமராஜர் ஆட்சியை நோக்கித்தான் இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. ஆனால், தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மாவட்ட தலைவர்களையே நியமிக்க முடியாத நிலையை வைத்துக் கொண்டு என்ன தைரியத்தில் அவர் இப்படிச் சொல்கிறார் என்று தெரியவில்லை.
ராமநாதபுரம், திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னையில் 2 மாவட்டங்கள் என மொத்தம் 8 மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவி இப்போது காலியாக உள்ளது. இந்த மாவட்டங்களுக்கெல்லாம் பொறுப்புக் குழுவை நியமித்து பொழுதைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால், பொறுப்புக் குழுக்குள்ளேயே யார் பெரியவர் என்ற ஈகோ யுத்தம் பஞ்சமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. இதனால், யாருக்குப் பின்னால் செல்வது என்று புரியாமல், இருக்கும் கொஞ்ச நஞ்ச காங்கிரஸ்காரர்களும் குழம்பிப்போய் நிற்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கல்வி நிறுவனங்களின் நிர்வாகி செல்லத்துரை அப்துல்லா, தனக்கு இந்தப் பதவி வேண்டாம் என்று சொல்லி 2022-ல் நாசூக்காக ஒதுங்கிக் கொண்டார்.
இதையடுத்து திருவாடானை எம்எல்ஏ-வான கருமாணிக்கத்தை ஒருங்கிணைப்பாளராக போட்டு 9 பேர் கொண்ட பொறுப்புக் குழுவை நியமித்து கட்சியை வளர்க்கச் சொன்னது மாநில காங்கிரஸ் தலைமை. வழக்கம் போல இங்கேயும் யார் சொல்வதைக் கேட்பது என்ற சர்ச்சை வெடித்தது. இதில், மாவட்ட தலைவர் பதவியை பிடிக்க கருமாணிக்கமும், பொறுப்புக்குழுவில் உள்ள நகராட்சி கவுன்சிலர் ராஜாராம் பாண்டியனும் ஆளுக்கொரு பக்கம் களப்பணியில் இருக்கிறார்கள்.
இதில், ராஜாராம் பாண்டியனை மாவட்ட தலைவராக்க பொறுப்புக் குழுவில் உள்ள சிலரே மெனக்கிடுவதாகச் சொல்லப்படுகிறது. இன்னொரு தரப்போ, “மாவட்டத்தை இரண்டாக பிரித்து இரண்டு பேரை தலைவராக்கிட்டா போச்சு” என்று புது யோசனை சொல்லிக் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்துக்காக ராமநாதபுரம் வந்திருந்தார் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.
அந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவரும் கருமாணிக்கத்தின் தந்தையுமான கே.ஆர்.ராமசாமி, “தேசிய கட்சியான காங்கிரஸுக்கு ஒரு வருடத்துக்கும் மேலாக மாவட்ட தலைவரை நியமிக்க முடியாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இப்படி இருந்தால் நாம் எப்படி கட்சியை வளர்க்க முடியும்?” என ஆதங்கத்தைக் கொட்டினார். இதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “அகில இந்திய தலைமைக்கு தகவல் தெரிவித்துவிட்டோம். இந்த விஷயத்தில் விரைவில் அவர்கள் நல்ல முடிவெடுப்பார்கள்” என்று சொன்னார்.
அவர் இப்படிச் சொல்லி மாதக் கணக்கிலாகியும் காங்கிரஸ் தலைமை அந்த நல்லமுடிவை இன்னும் எடுத்தபாடில்லை. இதுகுறித்து கே.ஆர்.ராமசாமியிடம் கேட்டபோது, “அகில இந்திய தலைமை தான் முடிவெடுத்து மாவட்ட தலைவர்களை நியமிக்க வேண்டும். பல மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் கட்சித் தலைமை அதில் கவனம் செலுத்தி வருவதாகச் சொல்லப்பட்டது. இப்போது தேர்தல்கள் முடிந்துவிட்டன. இதுபற்றி கட்சி தலைமையிடம் நான் முன்பே தெரிவித்துவிட்டேன்.
கட்சிக்கு மாவட்ட தலைவர்கள் இல்லாதது பெரிய பின்னடைவு தான். இதனால் கட்சியை பலப்படுத்த முடியாது. மாநில கமிட்டியும், அகில இந்திய தலைமையும் தான் இந்த விஷயத்தில் விரைவில் நல்ல முடிவெடுக்க வேண்டும்” என்றார். களப்பணி செய்யாதவர்களை எல்லாம் கட்சியில் வைத்திருப்பதில்லை என முடிவெடுத்திருப்பதாகச் சொல்லும் செல்வப்பெருந்தகை, மாவட்ட தலைவர்கள் நியமனத்திலும் கொஞ்சம் மெனக்கிடலாமே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT