Published : 13 Dec 2024 02:47 PM
Last Updated : 13 Dec 2024 02:47 PM
மதுரை; மதுரையில் பயணி ஒருவர், ஆட்டோவில் தவற விட்ட ரூ.3 லட்சம் பணத்தை ஓட்டுநர் நேர்மையாக வீட்டுக்கே சென்று ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றாம் பகுதி குழு முன்னாள் பகுதிக்குழு உறுப்பினர் ஆர்.பிச்சை. இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது ஆட்டோவில் கடந்த 12-ம் தேதி அன்று மதுரை 67-வது வார்டு டோக் நகரை சேர்ந்த சிவா என்பவரின் குடும்பத்தினர், பயணம் சென்றுள்ளனர். இவர்கள், ஒரு நகை வாங்குவதற்காக நகைக்கடைக்கு சென்றுள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநர் பிச்சை, அவர்களை நகைக்கடையில் இறக்கிவிட்டுவிட்டு, கே.கே.நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பாக ஆஜராவதற்கு சென்றுள்ளார். நீதிமன்றத்தில் காக்கி சட்டை போட்டு ஆஜராகக் கூடாது என்பதற்காக, சட்டையை கழட்டி ஆட்டோவின் பின்புறத்தில் வைத்துவிட்டு அங்கிருந்த வெள்ளை சட்டையை எடுத்து மாட்டியுள்ளார். அப்போது, நகை கடைக்குச் சென்று இறக்கிவிட்ட பயணிகள் தவறவிட்ட ஒரு பையை எடுத்துப் பார்த்துள்ளார்.
அதில் ரூ.3 லட்சம் பணம் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பிச்சை, அந்த பணத்தை ஆட்டோவில் தவறவிட்ட நபர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். பிச்சை ரேபிடோ ஆட்டோ ஓட்டி வருகிறார். அதனால், அவரை சிவா என்பவர் போன் செய்து சவாரிக்கு அழைத்துள்ளார். சிவா என்பவரின் வீட்டுக்கே சென்று அவர்களை சவாரி ஏற்றியதால் மீண்டும் ஆட்டோவை எடுத்துக் கொண்டு பிச்சை அவரது வீட்டுக்கே நேரடியாக சென்று தவறவிட்ட அவர்களுடைய பணத்தை ஒப்படைத்துள்ளார்.
பணத்தை தவறவிட்ட மனக்கவலையில் சோகமாக இருந்த குடும்பத்தினர் பணத்தைப் பெற்றதும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். ரூ.3 லட்சம் பணத்தை மிக நேர்மையாக வழங்கிய பிச்சை-க்கு, சிவா குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். பிச்சையின் நேர்மையான செயலை அறிந்த மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன், ஏபிபி கிளைச் செயலாளர் ராஜப்பா ஆகியோர், அவரது வீட்டுக்கு சென்று பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...