Published : 13 Dec 2024 02:48 PM
Last Updated : 13 Dec 2024 02:48 PM
புதுடெல்லி: மத்திய அரசு ஒரு ரூபாய்கூட தமிழ்நாடு அரசுக்கு தராமல் இப்படி கல் நெஞ்சோடு நடந்துகொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சித்துக் கொண்டே இருக்கக்கூடிய ஒரு நிலை. நிச்சயமாக விரைவில் தக்க பாடம் சொல்லித் தரப்படும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி பேசியதாவது: நான் இந்த மசோதாவை எதிர்க்கிறேன். பருவ நிலை மாற்றம் பல்வேறு இயற்கை சீற்றங்களை அதிகப்படுத்தியுள்ளது. புயல், மழை, வெள்ளம், காட்டுத் தீ போன்ற பிரச்சினைகளால் உயிர்களும் உடைமைகளும் பாதிக்கப்படுகின்றன. மக்கள் அதிகமாக இடம்பெயர வேண்டியுள்ளது.
பருவநிலைமாற்றத்தின் பாதிப்பை நாம் முழுமையாக புரிந்துகொண்டது போல தெரியவில்லை. ஏனென்றால், உலகம் முழுவதிலும் வெள்ளம், காட்டுத் தீ, வறட்சி ஆகியவை முன்பு எப்போதும் இல்லாததை விட அதிகமாகியுள்ளது. எந்த நாடும் இதற்கு முன்பு பார்த்திராத பாதிப்புகளை இப்போது சந்தித்து வருகிறது.
இந்தியாவில், பல மாநிலங்கள் ஒவ்வொரு நாளும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. நிலச்சரிவு ஏற்படுகிறது. இப்போது நாம் இந்த பேரிடர் மேலாண்மை என்பதை இன்னும் தீவிரமான பிரச்சினையாக பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறை புயல், வெள்ளம் வரும்போதும் நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவிட்டோம் என்று மத்திய அரசு பெருமையாக சொல்கிறது. ஆனால் மத்திய அரசால் போதுமான முன்னெச்சரிக்கை வழங்கப்படுவதில்லை.
முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பங்கள் மத்திய அரசிடம் இல்லை. உங்களுடைய தகவல் எப்படி உள்ளது என்றால் ஜோதிடம் பார்ப்பது போலத்தான் உள்ளது. 150 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் இருக்கும் போதுதான் உங்களால் தெளிவான எச்சரிக்கைகளை வழங்க முடிகிறது. இதை நடைமுறையில் ஒரு நாளுக்கு முந்தைய எச்சரிக்கை என்றுதான் கொள்ள வேண்டும்.
இந்த அவகாசத்தில் எத்தனை மக்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முடியும்? ஒரே நாளில் மாநில அரசுகளால் என்ன செய்ய முடியும்? பல நாடுகள் புயல்களை 300 கிலோ மீட்டர் தூரத்தில் உருவாகும்போதே கண்டறிய முடிகிறது. அதன் மூலம் 3 நாட்களுக்கு முன்பே மக்களை எச்சரிக்க முடிகிறது. நமது ரேடார் அமைப்புகளை மேம்படுத்தி ஒன்றிய அரசால் 3 நாட்களுக்கு முன்பே மாநில அரசுகளுக்கு எச்சரிக்கைகளை வழங்க முடிந்தால்... அது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
நாங்கள் விஸ்வகுரு, உலகுக்கே நாம்தான் ஆசிரியர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். ஆனால் நாம் உலகுக்கு முன்னணியாக இருக்க வேண்டுமென்றால், இந்த பேரிடர் மேலாண்மையிலும் நாம் முன்னணியில் இருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு அதுபற்றி கவலைப்படுவது போல் தெரியவில்லை. நீங்கள் விவசாயிகளின் சுதந்திரம், வாழ்க்கை, உரிமை, கண்ணியம் ஆகியவற்றைப் பறித்துவிட்டீர்கள். பேரிடர் மேலாண்மை என்பது மாநில பட்டியலில் வரும். பத்தி 6(1) இல் தொழில் நுட்ப வழிகாட்டுதலை மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் மாநில அரசு இருக்க வேண்டும் என்று பொருள்தானே?
பிரிவு 8-பி யில் புதிதாக ஒரு விஷயம் சேர்க்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை குறித்த உயர் மட்டக் குழு அமைக்கப்படும் என்று சொல்கிறீர்கள். அந்த குழு ஒன்றிய அரசின் குழுவாக இருக்கும். இந்த குழுதான் பேரிடரா? இல்லையா? என்று முடிவு செய்யும். இந்த குழுவுக்கு அப்படி எந்த அதிகாரமும் கிடையாது. இது அரசின் கீழ் உள்ளது.அரசின் ஆலோசனைப்படிதான் நடக்கும். அப்படியென்றால் இரட்டை இன்ஜின் கொண்ட மாநிலங்களில் ஏற்படுவதுதான் பேரிடர் என்று ஆகிவிடும். அப்படி இல்லாத, உங்களுக்கு எதிர்க்கட்சிகளாக இருப்பவர்கள் ஆளும் மாநிலங்களில் ஏற்படும் பேரிடர்களை அவர்களாகவே சமாளிக்க வேண்டும் என்றும் ஆகிவிடும்.
மிக்ஜாம் புயல் ஏற்பட்டபோது ரூ.37 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டிருந்தோம். ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள், நிலங்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் எங்களுக்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு நிவாரணம் வழங்கவில்லை. அதனால்தான் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். வயநாடு நம் கண் முன்னே ஏற்பட்ட மோசமான பேரிடர். ஆனால் அதற்கான நிவாரண உதவி மத்திய அரசால் வழங்கப்படவில்லை.
எனவே, பேரிடர் மேலாண்மைக்கு ஒரு துறை, ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். பேரிடர் மேலாண்மைக்காக ஒரு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் எங்கெங்கு எவ்வளவு பேரிடர்கள் ஏற்படுகின்றன என்பதை அவர்கள் கணக்கிட வேண்டும்.
மேலும், 2014 -2020 கால கட்டத்தில் வெப்ப அலைகளால் இந்தியாவில் 5 ஆயிரம் பேர் இறந்துவிட்டார்கள். மத்திய அரசும் வெப்ப அலையை பேரிடர் என்று அறிவிக்கவேண்டும. ஆனால், எங்களது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, வெப்ப அலை பாதிப்பை மாநில பேரிடர் என்று அறிவித்திருக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வரையில் நிதியுதவி வழங்குகிறது. எங்களது திராவிட மாடல் ஆட்சியின் பல்வேறு நடவடிக்கைகளை நீங்கள் பின்பற்றும் வகையில் அமைந்துள்ளன. அவற்றோடு இதையும் சேர்த்து நீங்கள் பின்பற்றலாம். தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருக்கக் கூடிய காரணத்தாலேயே, நாங்கள் நல்லாட்சி அளிக்கும் காரணத்தாலேயே தொடர்ந்து நாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம். நன்றாக படித்து நல்ல மார்க் வாங்கும் மாணவரை வகுப்புக்கு வெளியே நில் என்று சொல்வது போலத்தான் இருக்கிறது.
தமிழ்நாட்டில் 2015-16 வெள்ளம் ஏற்பட்டபோது ரூ.25 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். ஆனால் மத்திய அரசு கொடுத்தது ரூ.1,737 கோடி ரூபாய். வறட்சி காரணமாக ரூ.39 ஆயிரத்து 565 கோடி ரூபாய் கேட்டோம். ஆனால் மத்திய அரசு கொடுத்தது ரூ.1,748 கோடிதான். வர்தா புயல் தமிழ்நாட்டைத் தாக்கியபோது கேட்ட நிவாரணத் தொகை ரூ.22 ஆயிரத்து 573 கோடி. ஆனால் கொடுத்தது வெறும் ரூ266 கோடி ரூபாய்தான்.
ஒக்கி புயல் நம்மை தாக்கியபோது ரூ.9 ஆயிரத்து 302 கோடி கேட்டோம். ஆனால் ரூ.133 கோடிதான் கிடைத்தது. கஜா புயல் தமிழ்நாட்டைத் தாக்கியபோது ரூ.17 ஆயிரத்து 899 கோடி கேட்டோம். கொடுத்தது ரூ.1,144 கோடி ரூபாய்தான். நிவார் புயல் தாக்கியபோது ரூ.3 ஆயிரத்து 758 கோடி கேட்டோம். ஆனால் கிடைத்தது வெறும் ரூ.63 கோடிதான்.
கடந்த ஆண்டு கடுமையான மழை வெள்ளத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டபோதும் எங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. எனது சொந்தத் தொகுதியான தூத்துக்குடி மிக மோசமாக பாதிக்கப்பட்டது. ஆனால் எந்த உதவியும் இல்லை. ரூ.37 ஆயிரம் கோடி வெள்ள பாதிப்புக்காக கேட்டோம். ஒன்றும் வழங்கப்படவில்லை.
தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலுக்காக தமிழ்நாடு அரசு ஆரம்பகட்ட உதவியாக ரூ,2 ஆயிரம் கோடி கேட்டோம். மத்திய குழுவினர் வந்தபோது அவர்களிடம் ரூ.6 ஆயிரத்து 675 கோடி உதவி கேட்டோம். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மத்திய அரசு ரூ.944 கோடி விடுவிக்கப்படுவதாக அறிவித்தது. இதை வெள்ள நிவாரண நிதி என்று சத்தம் போட்டு சொன்னது.
ஆனால் உண்மை என்னவென்றால், எஸ்டிஆர்எஃப் நிதியின் கீழ் மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய பணம்தான் அது. தேசிய பேரிடர் நிதியில் இருந்து நீங்கள் எந்த பணமும் வழங்கவில்லை. ஆனால் நீங்கள் ஒரே நாடு என்று எளிதாக அழைக்கிறீர்கள். ஜிஎஸ்டி இழப்பீட்டில் தமிழ்நாடு ரூ.20 ஆயிரம் கோடியை இழந்திருக்கிறது. எங்களது நிதி சுயாட்சியை இழந்திருக்கிறோம்.
மத்திய அரசு ஒரு ரூபாய்கூட தமிழ்நாடு அரசுக்கு தராமல் இப்படி கல் நெஞ்சோடு நடந்துகொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சித்துக் கொண்டே இருக்கக்கூடிய ஒரு நிலை. நிச்சயமாக விரைவில் தக்க பாடம் சொல்லித் தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT