Published : 13 Dec 2024 12:07 PM
Last Updated : 13 Dec 2024 12:07 PM

‘பெரிய அளவில் பாதிப்பு இல்லை’ - தென் மாவட்ட மழை குறித்த ஆலோசனைக்குப் பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: “தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், பெரிய அளவுக்கு மழை பெய்துள்ளது. ஆனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை. எது வந்தாலும், அதை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்த அரசு தயாராக இருக்கிறது,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், “தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், பெரிய அளவுக்கு மழை பெய்துள்ளது. அதுதொடர்பாக, ஏற்கெனவே மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி, அதை மேற்பார்வையிடுவதற்காக, சென்னையில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். அதுதொடர்பான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தென் மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை. எது வந்தாலும், அதை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்த அரசு தயாராக இருக்கிறது. தென்காசி பகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், திருநெல்வேலிக்கு அமைச்சர் கே.என்.நேரு நேற்று சென்னை பார்வையிட்டார். பின்னர், திருச்சியில் மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு வந்துள்ளார். மறுபடியும் அவரை திருநெல்வேலிக்கு செல்லுமாறு கூறியிருக்கிறேன்.

மத்திய அரசு தமிழகத்துக்கு பேரிடர் நிதி கொடுக்க வேண்டியதை வலியுறுத்தி ஊடகங்கள் தொடர்ந்து எழுதினால் அதுவே மத்திய அரசுக்கு பெரிய அழுத்தமாக இருக்கும். மத்திய அரசு ஏற்கெனவே கொடுத்துள்ள நிதி போதுமானது அல்ல.

மழையால் நீர் வரத்து அதிகரித்துள்ள பகுதிகளில் ஏரிகள் திறந்துவிடும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. கரையோரப்பகுதி மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக சில இடங்களில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேவையான இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்படும். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ரூ.2000 நிவாரணம் வழங்கும் பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டது.

கடுமையாக எதிர்ப்போம்: மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை இண்டியா கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்போம். எங்களால் முடிந்தவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த மசோதாவை கடுமையாக எதிர்ப்போம். மசோதாவுக்கு எதிராக இண்டியா கூட்டணி சார்பில் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x