Published : 13 Dec 2024 10:15 AM
Last Updated : 13 Dec 2024 10:15 AM

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இடைவிடாத கனமழை - குற்றாலம் அருவிகளில் வெள்ளம்

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது

திருநெல்வேலி/ தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று பகலிலும், இரவிலும் இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை வரையில் பல்வேறு இடங்களிலும் மொத்தமாக 18.40 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியிருந்தது. ஆனால், நேற்று காலை 7 மணி தொடங்கி பகல் முழுக்க மிதமான மழை நீடித்தது. மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 242 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 61.40, சேரன்மகாதேவி- 55, மணிமுத்தாறு- 45.20, நாங்குநேரி- 24, பாளையங்கோட்டை- 14, பாபநாசம்- 20, ராதாபுரம்- 7.40, திருநெல்வேலி- 15.

திருநெல்வேலி மாவட்டம் முழுக்க நேற்று பகலில் பெய்த இடைவிடாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மக்கள் நடமாட்டம் குறைந்திருந்ததால் கடைகளில் வியாபாரம் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலான சாலையோரக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பள்ளிகளுக்கு மாலையில் விடுமுறை: திருநெல்வேலி மாவட்டத்தில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் விடுப்பு அறிவித்திருந்தார். நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்படவில்லை என்பதால், இடைவிடாத மழையில் நனைந்தும், போக்குவரத்து நெரிசலில் சிக்கியும், பெரும் சிரமங்களுக்கு மத்தியில் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், பிற்பகல் 3 மணிக்கு அனைத்து பள்ளிகளுக்கும் திடீரென்று விடுப்பு அறிவிக்கப்பட்டதால், கொட்டும் மழையில் மாணவ, மாணவிகள் மொத்தமாக பள்ளிகளில் இருந்து வெளியேறினர். இதனால், திருநெல்வேலி மாநகரில் பள்ளிகள் அமைந்துள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் இருந்து மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால், பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்படவில்லை. காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டனர். கனமழை எச்சரிக்கை காரணமாக மதியத்துக்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை என்று, ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவிட்டார்.

இதனால், மழையில் நனைந்தபடியே மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திரும்ப நேரிட்டது. தொடர் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

கடலுக்கு செல்ல தடை: திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, தென் தமிழகம், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடற் பகுதியில் காற்றின் வேகம் 35 முதல் 45 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லக்கூடாது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்மழை மற்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை அடுத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்கலைக்கழக தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து மற்ற கல்லூரி மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x