Published : 13 Dec 2024 10:13 AM
Last Updated : 13 Dec 2024 10:13 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

தொடர் மழையால் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே குளம்போல தேங்கிய மழைநீரில் சிரமப்பட்டு செல்லும் இருசக்கர வாகனம்.

தூத்துக்குடி/ கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியது. இதுமேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுகுறைந்து தென் தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவும்.

இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மிதமான சாரல்மழை பெய்யத் தொடங்கியது. அவ்வப்போது பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மதியம் 12.30 மணி வரை பெய்த மழை சிறிது நேரம் இடைவெளி விட்டது. அதன்பிறகு மீண்டும் 3 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது.

நேற்று பகல் முழுவதும் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தூத்துக்குடி மாநகரில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக பாளையங்கோட்டை சாலை, ஜிசி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

மன்னார் வளைகுடா பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடியில் நேற்று இரவிலும் தொடர்ந்து மழை பெய்தது.
தூத்துக்குடி பைபாஸ் சாலையில் மழைக்கு
மத்தியில் பயணித்த வாகனங்கள். | படங்கள்: என்.ராஜேஷ் |

இது தொடர்பாக அனைத்து மீனவகிராமங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள 265 விசைப்படகுகளும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதே போல் நாட்டுப்படகு மீனவர்களும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் மீன்வளத்துறையின் எச்சரிக்கை அறிவிப்பை மீறி ஏதேனும் நாட்டுப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளதா என்பதை கண்டறிய மீன்வளத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அனைத்து படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளனவா என்பதை ஆய்வு செய்தனர். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.

மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை முதல் மழை பெய்ததால், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உத்தரவிட்டார். இதனால் மாணவ, மாணவிகள், பெற்றோர் நிம்மதி அடைந்தனர். மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலை ரயில்வே சுரங்கப்பாதையில்
தேங்கி நிற்கும் தண்ணீர்.

கோவில்பட்டி: கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் மிதமான மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்ததால் சாலைகளில் உள்ள பள்ளங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பகலில் கனமழை பெய்தது.

இதனால் இளையரசனேந்தல் ரயில்வே சுரங்கப்பாதையில் சுமார் ஒரு அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியது. பிரதான சாலையில் பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கு புறத்தில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை 8.30 மணியில் இருந்து மாலை 3.30 மணி நிலவரப்படி கோவில்பட்டியில் மட்டும் 36 மி.மீ. மழை பெய்துள்ளது.

விளாத்திகுளம்: விளாத்திகுளம் பேரூராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட கத்தாளம்பட்டி பகுதியில் மழைநீர் தேங்குவதாக பொதுமக்கள் தெரிவித்ததை தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் அங்கு சென்று பார்வையிட்டு, உடனடியாக தாழ்வான பகுதியில் மண் கொண்டு நிரப்ப அறிவுறுத்தினார். மழை காரணமாக விளாத்திகுளம் பகுதியில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக மின் தடை ஏற்பட்டது.

தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் மிக கன‌மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம்முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது. ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க‌ வேண்டும்.

மேலும், தாமிரபரணி ஆறு, கோரம்பள்ளம் குளம், உப்பாறு ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளிலும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள் மூலம் கண்காணித்திட அனைத்து வட்டாட்சியர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்கவைக்க 97 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளும் வெள்ள தடுப்பு பணிகளுக்காக முழு வீச்சில் செயல்பட அறிவுறுத்தப்பட்டு களத்தில் செயல்பட்டு வருகிறது.

வெள்ள மீட்பு பணிகளுக்காக தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களில் 41 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 3,000 முதல் நிலைபொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டம் முழுதும் உள்ள 639 குளங்களில் உள்ள நீர் இருப்பு, நீர் வரத்து முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவற்றில் 32 குளங்கள் 70 சதவீதத்துக்கும் மேல் நீர் நிரம்பி உள்ளன. ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள ஒட்டநத்தம் குளம், முரம்பன்குளத்தில் 100 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. இதிலிருந்து வெளியேறும் நீர்வரத்து முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x