Published : 13 Dec 2024 06:25 AM
Last Updated : 13 Dec 2024 06:25 AM
சென்னை: தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்பில் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர் பேசியதாவது:இந்தியாவின் முன்னணி திரைப்பட விழாவாக சென்னை சர்வதேச திரைப்பட விழா மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 2008-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, திரைப்பட விழாவுக்கு முதன்முதலாக நிதியுதவி வழங்கினார். 2023-ம் ஆண்டு நிதியுதவியை ரூ.85 லட்சமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி வழங்கினார். இதேபோல் கோவா திரைப்பட விழாவுக்கும் ரூ.15 லட்சமாக நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளது.
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் திரைப்படத்துறையினருக்கு ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திரைப்படத்துறையினரின் நலவாரியத்தில் 27 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இவ்வாரியம் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் வழங்க தேர்வுக்குழு அமைக்கப்பட்டு விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக கடந்த வாரம் துணை முதல்வரும் நானும் ஆய்வு கூட்டம் நடத்தினோம். விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரி பணிகள் முடிவடையும். எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் அதிநவீன வசதியுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள் ரூ.40 கோடி மதிப்பீட்டில் தொடங்கவுள்ளோம். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
நிகழ்வில், இந்திய திரைப்பட திறனாய்வு கழகத் தலைவர் சிவன் கண்ணன், துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசுவாமி, பொதுச் செயலாளர் ஏவிஎம்கே.சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சென்னை சர்வதேச திரைப்பட விழா டிச.19 வரை நடைபெறுகிறது.
இதில் பல்வேறு நாடுகளின் 180 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. குறிப்பாக விருதுகள் பெற்ற திரைப்படங்கள் மட்டுமின்றி, பிரபல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்களும் திரையிடல் செய்யப்படுகின்றன. விழாவின் நிறைவில் சிறந்த படங்களுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. மேலும், திரைப்படத்துறை ஆளுமைகளின் கருத்தரங்கம், பயிற்சி வகுப்புகள், கலந்துரையாடல் உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT