Published : 13 Dec 2024 01:05 AM
Last Updated : 13 Dec 2024 01:05 AM

தெற்கு ரயில்வே தொழிற்சங்க தேர்தல்: எஸ்ஆர்எம்யு, டிஆர்இயு சங்கங்களுக்கு அங்கீகாரம்

தெற்கு ரயில்வேயில், 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில், எஸ்.ஆர்.எம்.யு., டி.ஆர்.இ.யு சங்கங்கள் தலா 25 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெற்று, அங்கீகார தொழிற்சங்கங்களாகத் தேர்வாகியுள்ளன.

ரயில்வேயில் முதல்முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு), டி.ஆர்.இ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் வெற்றி பெற்று, அங்கீகாரம் பெற்றன. இதையடுத்து, கடந்த 2013-ல் நடைபெற்ற தேர்தலில் எஸ்.ஆர்.எம்.யு. வெற்றி பெற்றது. இதன்பிறகு, பல காரணங்களால் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.

இதற்கிடையே, 11 ஆண்டுகளுக்குப் பிறகு, ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் டிச.4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தெற்கு ரயில்வேயில் தட்ஷின ரயில்வே ஊழியர்கள் சங்கம், தட்ஷின ரயில்வே கார்மிக் சங்கம், ரயில் மஸ்தூர் யூனியன், தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆகிய தொழிற்சங்கங்கள் தேர்தலில் போட்டியிட்டன.

தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்களில் 140 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் தபால் ஓட்டுகள் தவிர்த்து, 88.91 சதவீதம் ஓட்டு பதிவாகின. இந்நிலையில், ஆறு கோட்டங்களில் 11 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

சென்னை, திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட கோட்டங்களில் டிஆர்இயு சங்கமும், மதுரை, திருச்சி உள்ளிட்ட கோட்டங்களில் எஸ்ஆர்எம்யு சங்கமும், சேலத்தில் எஸ்ஆர்இஎஸ் சங்கமும் முன்னிலை வகித்தன. நேற்று மாலை ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்தது.

இதில், எஸ்.ஆர்.எம்.யு 26,132 ஓட்டுகளும், டி.ஆர்.இ.யு 25,815 ஓட்டுகளும் பெற்றிருந்தன. அதாவது, வாக்களிக்கப்பட்ட ஓட்டுகளில் எஸ்ஆர்எம்யு 34 சதவீத ஓட்டுகளையும், டிஆர்இயு 33.67 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருந்தன.

மொத்த வாக்காளர்களில், 23 ஆயிரம் ஓட்டுகளை (30 சதவீத ஓட்டுகளை) பெறும் சங்கத்துக்கு ரயில்வே அங்கீகாரம் கிடைக்கும். அந்த வகையில், இந்த 2 சங்கங்களும் 25 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெற்று, அங்கீகாரம் பெற்றன.

அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் 5 ஆண்டுகளுக்கு பொறுப்பில் இருக்கும். ரயில்வே தொழிலாளர்களின் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நிர்வாகத்துடன் நேரடியாக இவை பேச்சுவார்த்தையில் பங்கேற்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x