Published : 13 Dec 2024 12:51 AM
Last Updated : 13 Dec 2024 12:51 AM

காங்கிரஸின் கட்டமைப்பை வலுப்படுத்தும் குழுவின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

தமிழக காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் குழுத் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

தமிழக காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒப்புதலோடு காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் குழு தலைவராக முன்னாள் எம்.பி.யும், சிறுபான்மை ஆணைய முன்னாள் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்படுகிறார்.

தமிழகத்தில் உள்ள 39 எம்.பி. தொகுதிகளில் தலா 3 தொகுதிகளை ஒரு மண்டலமாகப் பிரித்து, அதற்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுபோல 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அமைப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

ஏற்கெனவே கிராமக் கமிட்டிகளை சீரமைக்க குழு அமைத்திருக்கிறோம். அந்தக் குழுக்கள் கட்சி கட்டமைப்பு வலுப்படுத்தும் குழுவுடன் இணைந்து மாவட்ட தலைவர்களின் கரத்தை வலிமைப்படுத்தும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு 100 சதவீதம் கிராமக் கமிட்டிகளை அமைத்தாக வேண்டும். அந்த அடிப்படையில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் குழுவுக்கு 2 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வரும் 28-ம் தேதி காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட நாளை கொண்டாட இருக்கிறோம். அப்போது மண்டல அமைப்பாளர்கள், நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர்களை அழைத்து பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளோம்.

மாநிலம் முழுவதும் கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளை காங்கிரஸ் கட்சியின் தலைமையிடமான சத்தியமூர்த்தி பவனில் இருந்தபடி தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.தணிகாசலம், துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன் ஆகியோர் கண்காணித்து ஒருங்கிணைப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

சபரீசனை அதானி சந்தித்தது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள கருத்துகள் பற்றி கேட்டதற்கு, "சபரீசன் திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை, அரசு பதவியிலும் இல்லை. ஒருவர் மற்றொருவரை சந்திப்பதில் தவறு இல்லை. அதேநேரம், அதானி தன்னை சந்திக்கவே இல்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார்" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x