Published : 12 Dec 2024 09:10 PM
Last Updated : 12 Dec 2024 09:10 PM
புதுடெல்லி: இன்று (டிச.12) நாடாளுமன்ற மக்களவையில் பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஐயூஎம்எல் தேசியத் துணைத் தலைவர் கே.நவாஸ்கனி எம்பி உரையாற்றினார்.
ராமநாதபுரம் தொகுதி எம்பியான கே.நவாஸ்கனி தனது உரையில் பேசியது: “பேரிடர் மேலாண்மை என்பது அவசரமான காலகட்டத்தில் அந்தந்த சூழலுக்கு தகுந்தார் போல் முடிவெடுத்து துரிதமாக மேற்கொள்ள வேண்டிய பணி. அது மத்திய அரசின் ஒத்துழைப்போடு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய பணி. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு வகையிலான இயற்கை புவியியல் அமைப்பிலானது. எனவே, அந்தந்த மாநிலங்களுக்கு எந்த வகையில் பேரிடர் மேலாண்மை மேற்கொள்ள முடியும் என்பது அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் உகந்தது. ஆனால் இந்த மசோதா மத்திய அரசிற்கு அதிகாரங்களை குவித்து மாநில உரிமைகளை பறிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான இந்த மசோதா, அதிகமான அதிகாரங்களை வழங்குகிறது. இப்படிப்பட்ட அதிகப்படியான அதிகாரங்கள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். இப்படிப்பட்ட அதிகப்படியான அதிகாரங்களால் ஏற்படும் குழப்பம் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு இடையூறாக இருந்து விடக்கூடாது. இந்த மசோதாவின் மூலம் ஏற்படுத்தப்படும் தரவுத்தளத்தில் பேரிடர் மதிப்பீடு, நிதி ஒதுக்கீடு விபரம், செலவு போன்ற விஷயங்கள் மத்திய அரசால் தீர்மானிக்கப்படும் வகையில் அமைந்திருக்கிறது. பேரிடர்களில் கூட அரசியல் செய்யும் இந்த அரசின் அவமானகரமான அரசியலை இந்த நாடு கண்டிருக்கிறது. பேரிடரின் போது, பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி மாநிலங்களில் ஒருவகையிலான நிதியும், எதிர்க்கட்சிகள் ஆட்சி மாநிலங்களில் பாரபட்சமான நிதியும் ஒதுக்கப்படுவதை ஒட்டுமொத்த நாடும் கண்டிருக்கிறது.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு கோரிய நிதியை இதுவரை வழங்கவில்லை. மத்திய நிதியமைச்சர், அரசின் குழுக்கள் பார்வையிட்டு, பெரும் சேதம் என்பதை அரசு ஒப்புக்கொண்டது. கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி வரை இந்தியா முழுவதும் 14 மாநிலங்கள் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதற்கான பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கிறது,
இதில் குஜராத்திற்கு ரூ.600 கோடியும் மகாராஷ்டிராவிற்கு ரூ.1492 கோடியும் ஆந்திராவிற்கு ரூ.1200 கோடியும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட இந்த அரசு வழங்கவில்லை. நாங்கள் இந்த ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்பட்டு இருக்கின்றோம். இந்த நிலையில் உங்கள் கையில் அதிகாரங்கள் குவிக்கப்படுவதை எப்படி நாங்கள் அங்கீகரிக்க முடியும்.
தற்போது திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகள் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது? எவ்வளவு சிறப்பு நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கியது? மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூ.1,260 கோடி ஒதுக்கியும் இதுவரை முதல் தவணை கூட விடுவிக்கப்படவில்லை.
அதேசமயம் ஆந்திரா, அசாம், பீகார், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இரண்டாம் தவணை வரை விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நவம்பர் 27 வரை 37 பேர் பலி, 870 வீடுகள் சேதம், 5521 கால்நடைகள் உயிரிழந்தாக மத்திய அரசே அறிக்கையின் மூலம் கூறுகிறது. பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதே நாடாளுமன்றத்தில் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஒரு தேதியை குறிப்பிட்டு இதற்காக நிதி விடுவிக்கப்படும் என கூறிவிட்டு அந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை.
பேரிடர் மக்களை தாக்கும் பொழுது காப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, நாம் இந்த மசோதா முன்மொழியும் நடைமுறைகளுக்கு காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோம். ஒவ்வொரு பேரிடரின் பொழுதும் உடனடி நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்க முடியுமா? இந்த மசோதா, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% ஐ உருவாக்கும் நகர்ப்புற அமைப்புகளுக்கு 0.6% மட்டுமே ஒதுக்குவது என்பது ஏற்புடையதல்ல.
பேரிடர் ஏற்படக்கூடிய நேரங்களில் ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் வசூலிக்கக் கூடிய மத்திய அரசு, மாநிலங்களுக்கு பேரிடர்களின் போது தேவைப்படக்கூடிய மீட்பு பணிகளுக்கான, நிவாரண பணிகளுக்கான நிதிகளை உடனடியாக விடுவிக்கும் வகையில் இந்த மசோதா அமைய வேண்டும்” என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT