Published : 12 Dec 2024 06:45 PM
Last Updated : 12 Dec 2024 06:45 PM
புதுடெல்லி: திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் திமுக எம்பி ச.முரசொலி மனு அளித்துள்ளார்.
இது குறித்து தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி இன்று டெல்லியில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து அளித்த மனுவின் விவரம்: திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயிலை நிரந்தரமாக தினசரி இயக்க வேண்டும். இந்த ரயிலால் பொதுமக்களுக்கு அதிக பலன் உள்ளது. தாம்பரம் - ராமேஸ்வரம் ரயிலினை பட்டுக்கோட்டை, பேராவூரணி வழித்தடத்தில் இயக்கிட வேண்டும்.
தஞ்சாவூர் - பெங்களூர் வழித்தடத்தில் "வந்தே பாரத்" புதிய ரயிலினையும் இயக்க வேண்டும். மன்னார்குடி- சென்னை தஞ்சாவூர் வழியாக வந்தே பாரத் புதிய ரயிலினை இயக்க வேண்டும். மதுரை - புனலூர் ரயிலினை தஞ்சாவூர் வழியாக வேளாங்கண்ணி வரையில் இயக்குவதும் அவசியம். சென்னை - எழும்பூர் காரைக்குடி கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்கவேண்டும். தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயிலை வாரம் ஏழு நாட்களும் இயக்கவும் வலியுறுத்துகிறேன். மன்னார்குடி - பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் - புதுக்கோட்டை ,தஞ்சாவூர் - அரியலூர் ஆகிய புதிய ரயில் வழித்தடங்களையும் ரயில்வே துறை அமைக்க வேண்டும்.
திருச்சி -பாலக்காடு பேசஞ்சர் மற்றும் திருச்சி - ஹவுரா விரைவு ரயில் வண்டியினை தஞ்சாவூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும், தஞ்சாவூர் - விழுப்புரம் மெயின் லைனை ஒரு வழி பாதையில் இருந்து இருவழிப் பாதையாக அமைக்க வேண்டும். பேராவூரணி, அதிராம்பட்டினம், பூதலூர், ஆலக்குடி, அய்யனாபுரம், நீடாமங்கலம், பாபநாசம் ஆகிய ரயில் நிலையங்களில் பல்வேறு ரயில்களை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT