Published : 12 Dec 2024 04:03 PM
Last Updated : 12 Dec 2024 04:03 PM

மாநில அரசு ஒத்துழைத்தால் நெடுஞ்சாலையில் பெட்ரோலியக் குழாய் பதிப்பு உறுதி: தமிழக பாஜக தகவல் 

சென்னை: மாநில அரசு ஒத்துழைத்தால் நெடுஞ்சாலையில் பெட்ரோலியக் குழாய் பதிப்பு உறுதி என்று பாஜக விவசாயப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக விவசாயி அணியின் மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக விவசாயிகள் பரிதாபத்துக்குரியவர்கள். தாங்கள் கட்டி காக்கும் ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலமும் உயர்மின் கோபுரங்கள், பெட்ரோலியக்குழாய் பதிப்பு, எரிவாயுக்குழாய் பதிப்பு மற்றும் ரயில்வேக்கு இடமெடுப்பு என நிலத்தை துண்டாடிவிடுகிறார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.

எரிவாயுக்குழாய் செல்வதால் நிலத்தின் மதிப்பு இழந்து தடைபட்ட திருமணங்கள் பல. பாகப்பிரிவினையில் அந்த பங்கு யாருக்கு? என்பதில் பல சச்சரவுகள், வழக்குகள். இழப்பீடு என்ற பெயரில் அரசு தருவதோ வெறும் ரூ.10,ரூ.5. ''Right of Use'' என்ற பெயரில் விவசாய நிலத்தை எடுத்துவிட்டு காலவரையற்று விளைநிலத்தில் குழாயை பதித்து விடுகிறார்கள். இரண்டடி விட்டக்குழாய் பதிப்பதற்கு எடுக்கப்படும் நிலமோ 60 அடி அகலம். அந்த இடத்திலும் நீண்டகால பயிரான தென்னை, பனை, மா, வாழை வைக்கக்கூடாது. ஆழ்குழாய் கிணறு அமைக்கக்கூடாது. மாட்டிற்கு கொட்டகை போடக்கூடாது என அடுக்கடுக்கான நிபந்தனைகள். குழாய்க்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு விவசாயி தான் பொறுப்பு.

இன்றைய விவசாயத்தில் கோவணம் கூட மிஞ்சாத விவசாயிக்கு கடைசியில் தன்னை காப்பாற்றுவது தன் நிலத்தின் மதிப்பு மட்டுமே. அதிலும் குழாய் பதித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கி விடுகிறது மாநில அரசு. கேரளாவிலும், கர்நாடகாவிலும் சாலையோரத்தில் பதிக்கப்படும் எரிவாயுக்குழாய் தமிழகத்தில் மட்டும் விளைநிலத்தில் பதிக்கப்படுவது ஏன்?

விவசாயிகள் மீது அக்கறையற்ற தமிழக அரசே இதற்கு காரணம்.கடந்த 2021 சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் விளைநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எச்செயலையும் எனது அரசு செய்யாது என்று உறுதியளித்த தமிழக முதல்வர் இப்போது சூலூர், பல்லடம் விவசாயிகள் பாதிக்கப்படும்போது மௌனம் காப்பது ஏன்?

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை சந்தித்த போதும், பாரத் பெட்ரோலிய அதிகாரிகளை சந்தித்தபோதும் அவர்கள் சொல்லுவதெல்லாம் மாநில அரசு காட்டிய வழியில் நாங்கள் செல்லுகிறோம் என்பதே. எனவே டெல்லியில் மத்திய பெட்ரோலிய த்துறை அமைச்சர் உடனான சந்திப்பு விவசாயிகளுக்கு தங்கள் நிலம் காக்கப்படும் என்ற நம்பிக்கை ஊட்டியிருக்கிறது.அந்த நம்பிக்கையை தமிழக அரசு காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு விவசாயிகள் காத்திருக்கிறார்கள்'' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x