Published : 12 Dec 2024 02:46 PM
Last Updated : 12 Dec 2024 02:46 PM

பாக். சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது: முதல்வருக்கு மத்திய அரசு கடிதம்

சென்னை: பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க இந்திய அரசால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக முதல்வருக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்களுடன் சேர்த்து 14 இந்திய மீனவர்கள் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 3-1-2024 அன்று பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.20ம் தேதியன்று கடிதம் எழுதியிருந்தார்.

பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க இந்திய அரசால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த கடந்த டிச.6ம் தேதியன்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், "பாகிஸ்தான் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 14 மீனவர்களையும், அவர்களது 'ஸ்ரீ வ்ராஜ் பூமி' மற்றும் 'மந்தீப்' பெயர் கொண்ட படகுகளையும் பாகிஸ்தான் அதிகாரிகள் 3-1-2024 அன்று சிறைபிடித்தனர்.

இதையறிந்த இந்திய அரசு, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க ஏதுவாக, பாகிஸ்தான் அரசின் கவனத்துக்கு இதனைக் கொண்டு சென்றுள்ளது. மீனவர்களுக்கு தூதரக அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகளால் இதுவரை அது வழங்கப்படவில்லை. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், சிறைபிடிக்கப்பட்டுள்ள 14 மீனவர்களுக்கும் விரைவில் தூதரக அனுமதி கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது.

மீனவர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும் வரை அவர்களது பாதுகாப்பு மற்றும் உடல்நலனை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்திய தூதரகம் இதைத் தொடர்ந்து கண்காணித்து, மீனவர்களை முன்கூட்டியே விடுவிப்பதற்கும், தாயகம் திரும்புவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்" என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

.........

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x