Published : 12 Dec 2024 02:42 PM
Last Updated : 12 Dec 2024 02:42 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழக முதல்வர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதால், மழைக்காக பயப்பட வேண்டிய அவசியமில்லை, என ஸ்ரீவில்லிபுத்தூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் ரூ.5.90 கோடி மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அளித்த பேட்டி: தமிழகத்தில் மழையின் தேவை இருப்பதால் மழை பெய்ய வேண்டும் என நினைக்கிறோம். அதிக மழை பெய்தால் அதை சமாளிக்கக்கூடிய தைரியம் இந்த அரசுக்கு உள்ளது. தமிழக முதல்வர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதால் மழையை நினைத்து பயப்பட வேண்டிய அவசியமில்லை.
மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், நீர்வளத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளையும் ஒருங்கிணைத்து மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதிகம் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT