Published : 12 Dec 2024 01:38 PM
Last Updated : 12 Dec 2024 01:38 PM
சென்னை: அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்நோக்கு மாவட்ட நடமாடும் கண் சிகிச்சைப் பிரிவுகளை தருமபுரி உள்ளிட்ட மேலும் 4 மாவட்டங்களில் நிறுவ தமிழக அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
50 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்களிடையே காணப்படும் பார்வை குறைபாட்டில், தேசிய சராசரியான 1.99 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் பார்வை குறைபாடு நோய் வீதம் 1.18 சதவீதமாக உள்ள நிலையில், பார்வையின்மையைக் குறைப்பதில் தமிழக அரசு தொடர்ந்து முன்னணியில் உள்ளது. இந்த சாதனையை எய்தியிருந்தபோதிலும், குறிப்பாக ஊரக, கிராமப்புற மற்றும் அணுகுவதற்கு கடினமான பகுதிகளில் கண்புரை மற்றும் நீரிழிவு காரணமாகவும் ஏற்படும் விழித்திரை பிரச்சினையுடைய பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, தீர்வு காண்பதில் கண் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துவது உடனடி தேவையாக உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்நோக்கு மாவட்ட நடமாடும் கண் சிகிச்சைப் பிரிவுகளை நிறுவ தமிழக அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடமாடும் பிரிவுகள் ஒளி விலகல் குறைபாடுகள், கண்புரை, பார்வை நரம்பு சிதைவினால் ஏற்படும் கண் அழுத்த நோய் (கிளகோமா), நீரிழிவு காரணமாக ஏற்படும் விழித்திரை பாதிப்பு நோய் (டயாபடிக் ரெட்டினோபதி) மற்றும் ஏனைய கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பயனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று பரிசோதனை செய்வதற்கான வசதிகளை வழங்கும்.
ஒவ்வொரு நாளின் முடிவிலும், மேல் சிகிச்சை (Further Treatment) தேவைப்படும் பயனாளிகள், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதை உறுதி செய்வதற்கு, அறுவை சிகிச்சைக்காக அல்லது லேசர் கதிர் சிகிச்சைக்காக அரசு கண் மருத்துவமனைகளுக்கு இந்த வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட, ஒவ்வொரு குளிரூட்டப்பட்ட நடமாடும் வாகனமும் தானியங்கி ஒளிவிலகல் மானி (Auto-refractometer), விழி அக நோக்கிகள் (Ophthalmoscopes), ஒளிவிலகல் கருவிகள் (Refraction Instruments), விழி அழுத்தமானி (Tonometer), கையடக்க விழியடி ஒளிப்படக் கருவி (Portable fundus camera) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த முன்னோடி முயற்சியின் தொடக்கமாக தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் சேலம், ராமநாதபுரம், திருவள்ளூர், கடலூர், கரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, மதுரை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி ஆகிய பதினோரு மாவட்டங்களில் ஏற்கனவே, நடமாடும் கண் மருத்துவ சிகிச்சை பிரிவுகள் அரசால் அமைக்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டில் மட்டும் செயல்பாட்டிலுள்ள 11 நடமாடும் பிரிவுகள் வாயிலாக 840 முகாம்கள் நடத்தி, 57,543 பயனாளிகளை பரிசோதனை செய்ததுடன், 10,803 கண்புரை உள் விழிவில்லை (ஐஓஎல்) அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது, கூடுதலாக தருமபுரி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இப்பிரிவுகளை நிறுவுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவும் ரூபாய் 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு, போதுமான எண்ணிக்கையில் முகாம்கள் நடத்தி, பயனாளிகளை பரிசோதித்து, தேவை ஏற்படின் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். இந்த தொடக்க முயற்சி, ஆண்டுதோறும் சுமார் 27,000 கண்புரை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கண்புரையினால் ஏற்படும் பார்வைக் குறைபாடு இல்லாத மாவட்டங்களைக் கொண்டது என்ற இலக்கை தமிழ்நாடு எய்துவதற்கு வழிவகுக்கும்.
இந்த முன்முயற்சி, ஒவ்வொரு வட்டாரத்திலுள்ள துணை கண் மருத்துவ உதவியாளர்களின் (பி.எம்.ஓ.ஏ) உதவியுடன் முகாம்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் வாயிலாக சமுதாய பங்களிப்பையும் உறுதி செய்கிறது. அணுகுவதற்கு கடினமான சிற்றூர்களுக்கு மேம்பட்ட கண் பராமரிப்பு சிகிச்சையை நேரடியாகக் கொண்டு செல்வதன் வாயிலாக, அனைவருக்கும், குறிப்பாக வறிய நிலையில் உள்ள மக்களுக்கு எளிதில் பெறக்கூடிய சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிப்பதை அரசு இதன் மூலம் உறுதி செய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT