Published : 12 Dec 2024 12:58 PM
Last Updated : 12 Dec 2024 12:58 PM
சென்னை: முன்னேறிய நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை உயர்கல்வியில் தமிழகம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் உயர்கல்வித்துறைக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து முதலமைச்சர் செயல்படுத்தி வருகின்றார் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமையில் உயர்கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வுக் கூட்டம் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறையின் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தப்பட்டு மாணவர்களின் கல்வித் திறனை மேலும் மேன்மை அடையச் செய்திடும் வழியில் உயர்கல்வித்துறை பங்களிப்பாளர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் கருத்தினைப் பெற்றுச் செயல்படுத்திட முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, உயர்கல்வித் துறை பங்களிப்போர் கூட்டம் திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மண்டலங்கள் வாரியாக நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக சென்னை மண்டலத்திற்குட்பட்ட உயர்கல்வித் துறை பங்களிப்போர் கலந்தாய்வின் நான்காவது கூட்டம் இன்றைய தினம் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறுகின்றது.
உயர்கல்வித்துறையினை மேலும் மேம்படுத்திட உயர்கல்வித் துறை அரசு அலுவலர்களுடன் உயர்கல்வித்துறையின் பங்களிப்போர் அனைவரையும் நேரில் சந்தித்துக் கலந்துரையாடி கருத்துகளைப் பெற இங்கு வந்துள்ளோம். இதன்மூலம் தாங்கள் வழங்கும் அரிய கருத்துகளைத் திரட்டித் தொகுத்து உயர்கல்வியின் தரத்தினை மேலும் மேம்படுத்திடக் கருதியுள்ளோம். 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது நீட் தேர்வினால் நமது கிராமப்புற மாணவர்கள் தங்களது உயர் கல்வியினைப் பெற இயலாத நிலையைக் கருத்தில் கொண்டு முந்தைய அரசால் மருத்துவ மாணவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டது.
இதனால் இட ஒதுக்கீடு பெற்ற ஒரு மாணவி இந்த இட ஒதுக்கீட்டினால் படிக்க இடம் கிடைத்தும் போதிய வசதி இல்லாததால் மருத்துவப் படிப்பைத் தொடர இயலவில்லை எனத் தெரிவித்தபோது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின், இதனைக் கனிவுடன் கேட்டு, அப்போதே அந்த மாணவியின் முழுக் கல்விச் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.
பின்னர் தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் மருத்துவப் படிப்பு மட்டுமல்லாமல் பள்ளிப்படிப்பை முடித்து பொறியியல், விவசாயம், சட்டம் உள்ளிட்ட அனைத்துப் பட்டப் படிப்பிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினைக் கொண்டு வந்ததுடன், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், பேருந்து கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் என அறிவித்து, அதற்காகப் பொறியியல் கல்விக்கு மட்டும் ரூ.213 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இது மாணவர்களுக்கு முதலமைச்சர் தாய் உள்ளத்தோடு செயல்படுத்தியுள்ள ஒரு மிகப்பெரிய திட்டமாகும்.
நல்ல தகுதியுடைய மாணவர்கள் வரவேண்டும் என்பதுடன் ஒவ்வொரு மாணவரும் தங்களது துறையில் தனித்தன்மை வாய்ந்த மாணவர்களாக திகழ வேண்டும் என்பது தமிழ்நாடு முதலமைச்சரின் ஆவல். கல்வியில் தமிழ்நாடு இந்திய அளவில் இந்த இடத்தில் இருக்கிறது என்பதை விட உலகளவில் தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கிறது என்று உயர்த்தித் தரவேண்டும் என்பதால் தான் “நான் முதல்வன்” என்ற முத்தான திட்டத்தை வழங்கியுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை 27 லட்சம் மாணாக்கர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தற்போது முக்கிய நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் பெற்றுப் பணிபுரிந்து வருகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் சுமார் 7 லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். அதேபோல் இவ்வாண்டு தொடங்கப்பட்ட தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் சுமார் 2 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போன்ற தேர்வாணையங்களால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்ய துணை முதலமைச்சரால் போட்டித்தேர்வு பயிற்சி மையம் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் தொடங்கப்படவுள்ளது. இதனை மாணாக்கர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 47 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. இந்தியாவின் உயர்கல்வி சதவீதம் 28 ஆக இருக்கிறது. 2030-க்குள் 50 சதவீதம் இலக்கு எட்டவேண்டும் என்பது ஒன்றிய அரசின் நோக்கமாகும். ஆனால் தமிழ்நாடு இப்பொழுதே 47 சதவீதத்தைத் தாண்டிவிட்டது. உயர்கல்வியில், தொழில் உற்பத்தியில், தொழில் முன்னேற்றத்தில் உலக நாடுகளின் வளர்ச்சியைப் பற்றி அறிந்து, அந்த முன்னேறிய நாடுகளுக்கு இணையாக, முன்னேற்ற நிலையினை தமிழ்நாடு எட்ட வேண்டும் என முதலமைச்சர் உயர்கல்வித்துறைக்குப் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகின்றார்கள்.
ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள், கல்லூரிகளின் தாளாளர்கள், செயலாளர்கள், முதல்வர்கள் இந்தக் கலந்தாய்வுக்கு வருகைதந்து தங்களது அரிய கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். மேலும், உயர்கல்வி படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினைத் தருகின்ற தொழில் நிறுவனங்கள் சார்ந்த நிறுவனத் தலைவர்கள், மேலாண்மை இயக்குநர்கள், செயல் தலைவர்கள் எந்த மாதிரியான தகுதியுடைய மாணவர்களை எதிர்பார்க்கின்றார்கள் என்ற கருத்தையும், மாற்றுத்திறனாளிகள் உயர்கல்வி பெறுவதில் என்னென்ன இடர்பாடுகள் இருக்கின்றன, அவற்றை களைவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் கேட்டறியப்படவுள்ளது.
மேலும், மாணவர்களின் பெற்றோர்களின் கருத்துகளையும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் படிக்கின்ற அரசுப்பள்ளிகளில் படித்த கிராமப்புற மாணவர்களின் கருத்துகளையும், தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்கள் என்னவிதமாகப் பயனடைந்துள்ளார்கள் என்பதையும், அவர்களின் கோரிக்கைகள் உள்ளிட்ட அனைத்துக் கருத்துகளையும் கேட்டறிந்து, அடுத்த கட்ட மேல்நிலைக்கு உயர்கல்வித்துறையை எடுத்துச் செல்லவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இன்று கருத்துகளைக் கேட்டறிய வந்துள்ளோம்.
ஆசிரியர், ஆசிரியரில்லாப் பணியாளர்கள், சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி நிர்வாகத்தினர் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் கிடைத்திடவும், அரசுத் திட்டங்களை முறையாக மாணவர்களுக்கு கொண்டு செல்லவும் தங்களது கருத்துகளை வழங்கினர். இங்கு வழங்கப்பட்ட கருத்துகள் அனைத்தும் உரிய பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தேவைகேற்ப ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில் நிறுவனங்களில் பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள தொழிலுக்கு ஏற்ற திறன் பெற்ற பணியாளர்கள் தேவை உள்ளதாகவும், அவர்களுக்குத் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி அளிப்பது குறித்தும் தெரிவித்தனர். ஏற்கனவே திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் தொழில் நிறுவனத்தாருடன் சந்தித்து உரையாடி உள்ளோம். அவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்ததையும் கருத்தில் கொண்டு மாணவர்களுக்குத் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கும் முறைகள் பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT