Published : 12 Dec 2024 11:20 AM
Last Updated : 12 Dec 2024 11:20 AM

நடிகர் ரஜினிகாந்த்துக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், "எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் - ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன்" என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "தன் தனித்துவமான நடிப்பாற்றலால் உலகளாவிய ரசிகர் பட்டாளம் கொண்டவரும், என்றும் பழகுவதற்கு இனியவருமான அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையுலக வாழ்வில் பொன்விழா ஆண்டில் உள்ள அன்பு நண்பர் ரஜினிகாந்த், இன்னும் பல்லாண்டு பூரண உடல் நலத்துடன் ரசிகர்களை மென்மேலும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "என் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கவும், அவரது அனைத்து முயற்சிகளிலும் வெற்றி தொடரவும் வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.

முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "சகோதரர் ரஜினிகாந்த்துக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடவுள் அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் அனைத்து மகிழ்ச்சியையும் அளிக்கட்டும்" என தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், இந்தியத் திரையுலகின் அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று தலைமுறைகளை, தனது வசீகரத்தால் கட்டிப் போட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மேலும் பல்லாண்டுகள் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "நடிகர் நண்பர் ரஜினிகாந்த் இன்று 75-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "மதிப்பிற்குரிய நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் நீடுடி வாழ இறைவனை வேண்டுகிறன்" என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x