Published : 12 Dec 2024 11:30 AM
Last Updated : 12 Dec 2024 11:30 AM
சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பொழிவு நிலவும் சூழலில் முறையான முன்னறிவிப்புக்கு பின்னரே அணைகள் திறக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு அறிக்கையில், "தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நேற்று இரவு முதல் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, என பல மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீண்டு வராத நிலையில், கனமழை நீடிக்கும் என்ற தற்போதைய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அம்மாவட்ட மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், எந்தவித முன்னறிவிப்பின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீரால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, வட மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களை சூழ்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது.
மழை பாதிப்புக்கு பின்பு, வரலாறு காணாத மழை, கணித்ததை விட அதிகளவிலான மழைப்பொழிவு என காரணத்தை தேடாமல், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றி முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே கனமழை பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க ஒரே வழியாக அமையும்.
எனவே, ஆற்றங்கரையோரம், தாழ்வான பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, முறையான எச்சரிக்கைக்கு பின்னரே அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT