Published : 12 Dec 2024 06:10 AM
Last Updated : 12 Dec 2024 06:10 AM
சென்னை: இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் அமைப்பு சாரா நல வாரியத்தில் அதிக அளவில் பதிவு செய்யும்படி, தொழிலாளர் துறை செயலர் வீரராகவராவ் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டை, தொழிலாளர் ஆணையரகத்தில் நேற்று தொழிலாளர் நலத் துறை செயலர் கொ.வீரராகவராவ் தலைமையில், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் முன்னிலையில், துறையின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய துறையின் செயலர் வீரராகவராவ், ``தொழிலாளர் துறை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 20 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில், தொழிலாளர்கள் பதிவுசெய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று வருகின்றனர். தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் விபத்து ஊனம் ஆகியவற்றுக்கு உதவியும், மாதாந்திர ஓய்வூதியமும் வழங்கப்படுகின்றன.
வெளி மாநில கட்டுமானத் தொழிலாளர்களை இவ்வாரியத்தில் பதிவு செய்யலாம். மேலும், இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் அமைப்பு சாரா நல வாரியத்தில் அதிக அளவில் பதிவுசெய்து பயன் பெறலாம்'' எனத் தெரிவித்தார்.
பின்னர், தொழிலாளர்கள் அளிக்கும் மனுக்களை உடனடியாக பரிசீலித்து உதவித் தொகை வழங்குமாறும், பெறப்படும் மனுக்களை பரிசீலனை செய்து நிதியுதவி வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியச் செயலாளர் ஆ.திவ்வியநாதன், தமிழ்நாடு கட்டுமானக் கழக இயக்குநர் டி.தர்மசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment