Published : 12 Dec 2024 03:17 AM
Last Updated : 12 Dec 2024 03:17 AM
சனாதன தர்மமும் அதன் ஆன்மீக விழுமியங்களும்தான் நம் நாட்டின் முக்கிய பலம். பாரதத்தை விஸ்வ குருவாக மாற்ற வேண்டும் என்ற பாரதியாரின் கனவை நிறைவேற்ற அனைத்து பாரதிய மொழிகளையும் வலுப்படுத்துவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.
பாரதியாரின் 143-வது பிறந்தநாள் மற்றும் இந்திய மொழிகள் தினவிழா ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது:
மகாகவி பாரதியார் பிறந்தநாளில் நாம் அனைவரும் அவரது வீரர்கள் என்பதால், தேசத்திற்கு நம்மால் முடிந்ததைச் செய்ய நேர்மறை ஆற்றலைப் பேண வேண்டும். பாரதியார் பாரதத்தையும் பாரதீய மொழிகளையும் மிகவும் நேசித்தவர். ஆதி சங்கராச்சாரியார், சுவாமி விவேகானந்தர் மற்றும் பிறர் போல அவரது குறுகிய வாழ்நாளில் சமூகத்தின் எழுச்சி மற்றும் இந்தியாவின் சுதந்திர வரலாற்றில் அவர் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார்.
ஆங்கிலேயர்கள் நமது தாய்மொழியைக் கொன்று, ஆங்கில மொழி தனித்துவமிக்கது எனச் சொல்லி திணிக்க முயன்றபோது அதைப் பாரதியார் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். ஆங்கிலேயர்கள், பாரதிய மொழிகள் அனைத்தையும் வடமொழி, அடிமை மொழி என்று சொல்லி தாய்மொழிகளுக்குப் பெரும் அவமானத்தை ஏற்படுத்தினர். அப்போது பாரதியார், ஆங்கிலத்தை விட அறிவியலை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்த மொழியாக தமிழை முன்னெடுத்துச் சென்றார்.
ஆங்கிலேயர்கள் பாரதிய மொழிகளையும் பாரத அறிவு அமைப்பையும் புரிந்து கொள்ள இயன்றவரை முயன்றனர். மக்களிடையே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதன் மூலம் இந்திய அறிவு அமைப்பை அழிக்க மிஷனரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
பாரதியாரின் 'செப்புமொழி பதினெட்டுடையாள் சிந்தனை ஒன்றுடையாள்' என்ற கவிதை ஒற்றுமையின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது. ராமாயணம், மகாபாரதம், பாகவதம் ஆகிய மூன்று பெரிய நூல்கள் முழு தேசத்தின் இதயத் துடிப்பை சித்தரிப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பாரதிய மொழிகளும் ஹிந்தியை விட பழமையானவை, மற்றவர்கள் மீது இந்தி திணிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. இத்தகைய உள்நோக்கம் சமுதாயத்திற்கு நல்லதல்ல.
காலனியாதிக்கத்தின் போது இழந்த தனது கடந்த கால பெருமையை மீட்டெடுப்பதற்காக இந்தியா சரியான திசையை நோக்கி திரும்பி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. பல உலகளாவிய நெருக்கடிகளை தீர்க்க இந்தியாவின் தலைமையை உலகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில், பொய்களைப் பரப்புவதன் மூலம் நமது முன்னேற்றத்தை பலவீனப்படுத்தவும், உலக அளவில் இந்தியாவின் பெருமையை குறைத்து மதிப்பிடவும் மிஷனரிகள் மற்றும் ஜிகாதிகள் போன்ற சில எதிர்மறையான சக்திகள் உள்நாட்டிலும் வெளியிலும் உள்ளன. அரசு இயந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையை இழக்கச் செய்வதன் மூலம் சமூகத்தில் பிரச்சினைகளையும் அராஜகங்களையும் உருவாக்குவதுதான் அவர்களின் உத்தியாக உள்ளது.
சனாதன தர்மமும் அதன் ஆன்மீக விழுமியங்களும்தான் நம் நாட்டின் முக்கிய பலம். இந்த தீய சக்திகளுக்கு எதிராக நீங்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். அத்துடன், பாரதத்தை விஸ்வ குருவாக மாற்ற வேண்டும் என்ற பாரதியாரின் கனவை நிறைவேற்ற அனைத்து பாரதிய மொழிகளையும் வலுப்படுத்துவதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT