Published : 12 Dec 2024 12:37 AM
Last Updated : 12 Dec 2024 12:37 AM
நாகப்பட்டினம்: பாஜக நிர்வாகியை சந்தித்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் பொய்கை நல்லூரைச் சேர்ந்த விஜயசேகரன், வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவரது மகள் துவாரகா மதிவதனி, 2-ம் வகுப்பு படிக்கிறார்.
கடந்த ஆண்டு ‘என் மண் என்மக்கள்’ யாத்திரை மேற்கொண்டிருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நாகை வந்தபோது, அவரை தந்தையுடன் சென்று சந்தித்த துவாரகா மதிவதனி, நாகையில் நவோதயா வித்யாலயா பள்ளி கட்டித்தர பிரதமர் மோடியிடம் வலியுறுத்துமாறு கோரிக்கை விடுத்தார். பின்னர் கடந்த ஜனவரியில் பிரதமர் மோடி திருச்சி வந்தபோது, அவரை வரவேற்க தந்தையுடன் சென்ற துவாரகா மதிவதனி, “எங்கள் ஊர் நாகப்பட்டினம். அரசுப் பள்ளிகளில் இந்தி படிக்க வசதி இல்லை. பள்ளிக்கூடம் கட்ட என் அப்பாவிடம் சொல்லி, இடம் தர ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் பள்ளிக்கூடம் கட்டித்தாருங்கள். நாங்களும் இந்தி பயில வேண்டும்” என்ற வாசகம் எழுதிய அட்டையைக் காட்டி, பிரதமரை வரவேற்றார்.
இந்நிலையில், கடந்த வாரம் நாகை வந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தத்தையும் விஜயசேகரன் சந்தித்துள்ளார். இதையடுத்து, துறை ரீதியான காரணங்கள் என்று கூறி விஜயசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நாகை வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம், விஜயசேகரனின் சஸ்பெண்ட் குறித்து கட்சியினர் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “விஜயசேகரன் பணியின்போது பாஜகவினர் யாரையும் சந்திக்கவில்லை. படிப்பதற்காக நவோதயா பள்ளிக் கூடம் கட்டிக் கொடுங்கள் என்று கேட்டது தவறா? திமுகவினர் அளித்த அழுத்தம் காரணமாகவே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுக எவ்வளவு மோசமாக அரசியல் செய்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம். நாகை காவல் துறையின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்தார். காவலர் விஜயசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது காவல் துறை வட்டாரத்தில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT