Published : 11 Dec 2024 09:06 PM
Last Updated : 11 Dec 2024 09:06 PM
சென்னை: தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக பாமக முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே புஞ்சை இடையார் மேல்முகம் கிராமத்தில் மகாத்மா காந்தி அறக்கட்டளைக்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள 1.73 ஏக்கர் நிலத்தை போலி சங்கப்பதிவு மூலமாக அபகரித்ததாக கபிலர்மலை தொகுதி பாமக முன்னாள் எம்எல்ஏ-வான பாண்டமங்கலம் பி.நெடுஞ்செழியன், வழக்கறிஞர் ஏ.பி.காமராஜர், பரமத்தி வேலூர் பேரூராட்சி முன்னாள் தலைவரான பொன்னிமணி என்ற சுப்பிரமணியன் ஆகியோர் மீது நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டு நிலஅபகரி்ப்பு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மூவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், இந்த வழக்கில் 6 ஆண்டுகள் தாமதமாக கடந்த 2019-ம் ஆண்டு தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் ஆஜராகி தங்கள் மீதான குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்படவில்லை என்பதாலும், தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாலும் வழக்கை ரத்து செய்ய வேண்டும், என வாதிட்டார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.வினோத்குமார், கோடிக்கணக்கான மதிப்புள்ள தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை நண்பர்களான மூவரும் கூட்டுசேர்ந்து அதிகார பலத்துடன் திட்டமிட்டு அபகரித்து அரிமா சங்கத்துக்கு குத்தகைக்கு விட்டுள்ளனர். எனவே இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது, என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.வேல்முருகன், பாமக முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT