Published : 11 Dec 2024 02:02 PM
Last Updated : 11 Dec 2024 02:02 PM
ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற பெண் உள்பட 4 இலங்கை தமிழர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 310-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு ராமேசுவரம் தண்ணீர் ஊற்று கடற்பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியின் போது கையில் பைகளுடன் நின்று கொண்டிருந்த 4 இலங்கை தமிழர்களை தங்கச்சிமடம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அந்த நால்வரும், மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த சசிகுமார் (28), கோகிலவாணி (44), வேலூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த சேகர் (எ) ராஜ்மோகன் (39), சிதம்பரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த நாகராஜ்( 68) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் 4 பேரும் சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை செல்ல முற்பட்டதும் போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 4 பேரிடமும் தொடர்ந்து விசாரித்து வரும், தங்கச்சிமடம் போலீஸார் இவர்களை படகு மூலம் அழைத்துச் செல்ல முயன்றவர்கள் தொடர்பான விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT