Published : 11 Dec 2024 12:50 AM
Last Updated : 11 Dec 2024 12:50 AM
கடந்த காலங்களில் 19 சதவீதம் நிதி குறைப்பு செய்யப்பட்டதால், தமிழகத்துக்கு சுமார் ரூ.2.63 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2024-2025-ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் மீதான விவாதத்துக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துப் பேசியதாவது: சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பொருத்தவரையில் மாநில அரசுக்கு 50 சதவீதம், மத்திய அரசுக்கு 50 சதவீதம் என நிதி பகிரப்படுகிறது. 15 -வது நிதிக்குழுவானது மத்திய அரசு தொகுப்பில் இருந்து 41 சதவீதம் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இருப்பினும் 41 சதவீதம் நமக்கு கிடைத்து இருக்கிறதா என்றால் அது இல்லை. அது 33 சதவீதம் என்ற அளவிலே இருந்துள்ளது. அந்த 33 சதவிகிதத்தில் தமிழகத்துக்கு கிடைத்து இருப்பது வெறும் 4.07 சதவிகிதம்தான். ஆனால் அதேநேரத்தில் உத்தரப்பிரதேசத்துக்கு 17.9 சதவீதம், பீகாருக்கு 10 சதவீதம் கிடைத்துள்ளது.
மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 16.83 சதவிகிதம் என்ற அளவில் வசூலிக்கக்கூடிய மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணமானது மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படாத ஒரு நிலை இருக்கிறது. எனவேதான், அண்மையில் சென்னை வந்த 16- வது நிதிக்குழுவில் முதல்வர் இதுதொடர்பாக அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறியுள்ளார். மத்திய அரசில் இருந்து பகிர்ந்து அளிக்கக்கூடிய நிதியில் இருந்து குறைந்தபட்சமாக 50 சதவீதம் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களுக்கு ஒரு உச்சவரம்பு வர வேண்டும். 10 சதவீதத்துக்கு மட்டும் அவர்கள் வசூலிக்கக்கூடிய ஒரு செயல்முறையைக் கொண்டு வரவேண்டும். அதற்கு மேலாக அவர்கள் வசூலித்தால் நிச்சயமாக அந்த கூடுதல் தொகை பகிர்ந்தளிக்கக்கூடிய தொகுப்பில் கொண்டு வர வேண்டுமென்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
எனவே, நமக்கு 9- வது நிதிக்குழுவில் இருந்து தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்படுகிறது. குறிப்பாக 14-வது நிதிக் குழு காலத்தில், கடந்த காலங்களில் சுமார் 19 சதவீதம் நமக்கு நிதி குறைப்பு நடந்திருக்கிறது. இது, சுமார் ரூ.2.63 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நமது கடன் அளவில் 32 சதவீதம் இருக்கக்கூடியது. கடந்த கால நிதிக் குழுவினுடைய பரிந்துரைகள்தான் தமிழகத்துக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நமது நிதி மேலாண்மையின் காரணமாக கடன் சுமைகளை குறைக்கும் முயற்சிகளை செய்து வருகிறோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT