Published : 11 Dec 2024 12:31 AM
Last Updated : 11 Dec 2024 12:31 AM
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1958-ல் கட்டப்பட்ட சாத்தனூர் அணை, 119 அடி உயரம் கொண்டது. தமிழகத்தின் முக்கியமான அணைகளில் ஒன்றான இந்த அணை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் விவசாயத்துக்கான முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது.
கடந்த நவ. 30-ம் தேதி ஃபெஞ்சல் புயல்காரணமாக தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. டிச. 1-ம் தேதி காலை விநாடிக்கு 5,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நள்ளிரவு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்தது. மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு 1.68 லட்சம் கனஅடியாக நீர்வரத்து உயர்ந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 119 அடியை நெருங்கியது.
இதையடுத்து, அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. முறையான அறிவிப்பின்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. கனமழைக்கு முன்னரே அணையின் நீர்மட்டம் ஏறத்தாழ முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றியதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தவிர்த்திருக்க முடியாதா என்ற கேள்வி எழுகிறது. முன்னறிவிப்பின்றி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால்தான் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இதேபோல, படிப்படியாக தண்ணீரைத் திறந்திருந்தால் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்காது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்களின் குற்றச்சாட்டுகளை தமிழக அரசு முற்றிலுமாக மறுத்தது. அனைத்து நடைமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்புதான் தண்ணீர் திறந்துவிடப் பட்டதாக அரசு விளக்கம் அளித்தது. அப்பகுதியில் பெய்த மழை, அணையின் கொள்ளளவு, தண்ணீர் வரத்து தொடர்பான தரவுகளின் ஆய்வு மூலம், உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் அரூர், ஊத்தங்கரை, செங்கம் வட்டங்களில் டிச. 2-ல் கனமழை பெய்தது. அன்று அரூரில் 251 மி.மீ. ஊத்தங்கரையில் 185 மி.மீ. மழை பதிவானது. அணையின் கீழ்ப்பகுதி வட்டங்களில் அதிக மழை பெய்ததால், தென்பெண்ணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
70 ஆண்டுகளில்... அதேபோல, அணையின் கீழ்ப்பகுதிகளான தண்டராம்பட்டு, திருவண்ணாமலையில் டிச. 1, 2-ம் தேதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 225 மி.மீ. மழை பதிவானது. கடந்த 70 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச மழை அளவாகும். 2023 டிசம்பரில் பெய்த கன மழையால் அணையின் மொத்த கொள்ளளவில் 95 சதவீதம் நீர் நிரம்பியது. பின்னர் மழை இல்லாததால் அணை நீர்வரத்து குறைந்தது. அதேநேரத்தில், அணையில் இருந்து ஆரம்பத்தில் விநாடிக்கு 530 கனஅடி வீதம் வெளியேற்றப்பட்ட தண்ணீர், பாசன வசதி, குடிநீர், மின்சார உற்பத்திக்காக 1,430 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
கடந்த மே-ஜுன் மாதங்களில் கொள்ளளவு 20 சதவீதம் அள வுக்கு குறைந்ததை தொடர்ந்து, அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் மழை காரணமாக அணையின் நீர்இருப்பு 40 சதவீதம் அதிகரித்தது. தொடர்ந்து கனமழை பெய்ததால் செப்டம்பரில் நீர்இருப்பு 90 சதவீதமாகவும், அக்டோபரில் 95 சதவீதமாகவும் உயர்ந்தது.
அணையின் நீர்இருப்பு 95 சதவீதம் என்ற அளவில் இருக்கும் வகையில், செப்டம்பர், அக் டோபர் மாதங்களில் 500 முதல் 1,200 கனஅடி வரை படிப்படியாக நீர் வெளியேற்றப்பட்டது. ஏற்கெனவே அணையில் 95 சதவீதம் நீர் இருந்த நிலையில், நவ. 29 முதல் டிச. 5 வரை யிலான நாட்களில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து பெரிதும் அதிகரித்தது. டிச. 2 முதல் 5-ம் தேதி வரை நீர்வரத்து 1.3 லட்சம் கனஅடியாக இருந்தது.
அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. ஏற்கெனவே அணையில் 95 சதவீதம் நீர் இருந்த நிலையில், அணைக்கு வந்த அதிகப்படியான மழைநீரை சேமித்து வைத்துக்கொண்டு, பின்னர் திறந்துவிடுவது என்பது சாத்தியமில்லாதது. இந்த சூழலில் தொடர்ந்து கனமழை கொட்டியதால் நிலைமை மோசமானது என்று புள்ளி விவர ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சாம்பவி பார்த்தசாரதி/ விக்னேஷ் ராதாகிருஷ்ணன்
(‘தி இந்து' ஆங்கில நாளிதழில் இருந்து..)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment