Published : 11 Dec 2024 12:24 AM
Last Updated : 11 Dec 2024 12:24 AM

சுகாதார திட்டங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது: துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

வேலூரில் நறுவீ மருத்துவமனை மற்றும் ‘தி இந்து’ நாளிதழ் இணைந்து நடத்திய ‘ஆரோக்கியமான இந்தியா, மகிழ்ச்சியான இந்தியா’ நிகழ்வை தொடங்கிவைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், ஆர்.காந்தி, நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத், `தி இந்து' குழும இயக்குநர் என்.ராம், தலைமை செயல் அதிகாரி எல்.வி.நவ்நீத் உள்ளிட்டோர்.

தமிழகம் சுகாதாரத்துறை திட்டங்களில் முன்னணியில் உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலூரில் நறுவீ மருத்துவமனை மற்றும் ‘தி இந்து’ இணைந்து நடத்திய ‘ஆரோக்கியமான இந்தியா, மகிழ்ச்சியான இந்தியா’ என்ற நிகழ்வை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘தமிழக சுகாதார துறையின் முதன்மை திட்டங்களில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் முக்கியமானதாக உள்ளது. இந்த திட்டம் 2024-ம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளுக்கு இடையேயான பணிக்குழு விருதினை சமீபத்தில் பெற்றுள்ளது. இந்த திட்டம் சுமார் 2 கோடி மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிலேயே சுகாதாரம் உள்ளிட்ட 13 முக்கிய துறைகளில் தமிழகம் முன்னணியில் இருப்பதாக நிதி ஆயோக் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

சுகாதார சேவைகளை மக்களின் வீடுகளுக்கே கொண்டு செல்வதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, 'இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் சுகாதார துறை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. மாநில அரசின் செயல்திறனுள்ள நடவடிக்கைகளால் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை 42% அதிகரித்துள்ளன. ‘தி இந்து’ மற்றும் நறுவீ மருத்துவமனை போன்ற மக்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து ஆதரவளிப்பதால் மட்டுமே இதுபோன்ற முயற்சிகள் பெருகும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், ‘தி இந்து’ குரூப் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் என்.ராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது, ‘‘இந்தியா டுடே இதழின் ஆண்டு மதிப்பீடுகளின்படி, மாநிலங்களின் நிலை தொடர்பான அறிக்கையில், நாட்டிலேயே குறிப்பாக மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் மாநில சுகாதாரத் துறை, நாட்டின் மற்ற பகுதிகளுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே முன்மாதிரியாக உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சியால், ஐக்கிய நாடுகள் சபையின் விருதைப் பெற்றுள்ள மக்கள் தேடி மருத்துவம் சர்வதேச அளவில் அறியப்பட்ட சுகாதாரத் திட்டமாக மாறியுள்ளது’’ என்றார்.

நறுவீ மருத்துவமனையின் தலைவர் ஜி.வி.சம்பத் பேசும்போது, ‘‘தி இந்து உடனான இந்த முக்கியமான கூட்டு நடவடிக்கையில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்லும்’’ என்றார். ‘‘மக்களுக்கான உடல்நலம் குறித்த முடிவுகளை எடுப்பதற்கு இது சரியான படியாக அமைந்துள்ளது" என்று ‘தி இந்து’ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி எல்.வி.நவ்நீத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ‘‘ஆரோக்கியமான இந்தியா, மகிழ்ச்சியான இந்தியா’’ குறித்து மேலும் அறிந்துகொள்ள healthyindiahappyindia.thehindu.co.in என்ற தளத்தை பார்வையிடலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x