Published : 10 Dec 2024 04:23 PM
Last Updated : 10 Dec 2024 04:23 PM
சென்னை அம்பத்தூர் அருகே பாடி பகுதியில் உள்ளது முகப்பேர் சாலை. இச்சாலை, திருமங்கலம் - அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலையையும், மண்ணூர்பேட்டை - சி.டி.எச். சாலையையும் இணைக்கக் கூடியதாகும். சுமார் ஒன்றரை கி.மீ. தூரம் உள்ள இச்சாலை, பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
இந்த முகப்பேர் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளும், திருமண மண்டபம், கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் உட்பட பலவகையான நூற்றுக்கணக்கான கடைகள் அமைந்துள்ளன. இச்சாலையை ஒட்டியுள்ள பாடி - சத்தியா நகர், குபேரர் தெரு, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் - கோல்டன் குடியிருப்பு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையில், சுமார் 200 மீட்டரில் அருகருகே 4 டாஸ்மாக் மதுபானக் கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளால் பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்ததாவது: பாடி-முகப்பேர் சாலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 டாஸ்மாக் மதுபான கடைகள் தான் இருந்தன. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் கடந்த 2017-ம் ஆண்டு மூடப்பட்டன.
அவ்வாறு தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மாற்றாக 2 மதுபான கடைகளை பாடி - முகப்பேர் சாலையில் ஏற்கெனவே இருந்த கடைகள் அருகே அமைத்தது டாஸ்மாக் நிர்வாகம். இதனால், மது அருந்தும் கூடங்களுடன் கூடிய 4 டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு வரும் மதுபிரியர்களாலும், அவர்களது இரு சக்கர வாகனங்களாலும் இந்த சாலை நாள்தோறும் போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளாகிறது.
மேலும், மதுபிரியர்களின் போதை ஆட்டம் மற்றும் வீண் தகராறு காரணமாக அவ்வப்போது பதற்றமான சூழல் ஏற்படுகிறது. அப்போது, சாலையில் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஒரு வித அச்சத்துடனேயே கடந்து செல்லவேண்டியுள்ளது.
மேலும், 4 டாஸ்மாக் மதுபான கடைகள் அருகே உள்ள தெரு விளக்குகள் பெரும்பாலான நாட்களில் எரிவதில்லை. இதனால், மதுபிரியர்களின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர், பொருட்கள் வாங்க கடை வீதிக்கு வருவோர் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அருகருகே உள்ள 4 டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT