Published : 10 Dec 2024 12:01 PM
Last Updated : 10 Dec 2024 12:01 PM
சென்னை: “இந்தாண்டு திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 350 கிலோ எடை கொண்ட கொப்பரை மற்றும் திரிகளை மேலே எடுத்துச் செல்ல வேண்டும். 40 டன் கொண்ட சுமார் 450 கிலோ நெய்யும் மேலே எடுத்துச் செல்ல வேண்டும். எனவே இந்த இரண்டு பணிகளுக்கும் சேர்த்து எவ்வளவு மனித சக்தி அதற்கு பயன்படுத்த வேண்டுமோ, அத்தனை பேரை பயன்படுத்தி, எந்தவித அசம்பாவிதமும் நேராமல், தீபத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.” என்று சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை வாரியான அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அப்போது பேரவைத் துணைத் தலைவரும், உறுப்பினருமான பிச்சாண்டி, வரலாறு காணாத மழை திருவண்ணாமலையில் பெய்ததைத் தொடர்ந்து மலையில் மூன்று இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, 7 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபம் என்பது அண்ணாமலையார் கோயிலின் முக்கியத் திருவிழா. தீபத் திருநாளான்று மலையில் ஆண்டுதோறும் 2000 பேர் மலையேறுகிறார்கள். இந்தமுறை அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? அதுதொடர்பாக அரசு என்ன திட்டங்களை வகுத்துள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: சங்க காலம் முதலே நடந்து வரும் திருவிழாக்களில் ஒன்றாக திருவண்ணாமலை தீபத் திருவிழா இருந்து வருகிறது. இந்தாண்டு தீபத் திருவிழாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில், துணை முதல்வர் கடந்த அக்.18-ம் தேதி, நேரடியாக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆய்வு செய்தார்.
அதன்பிறகு தொடர்ச்சியாக 6 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், நான் பங்கேற்ற 2 கூட்டங்கள், தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் கூட்டங்கள் நடந்தன. அண்மையில் பெய்த பெருமழையின் காரணமாக திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டது. அப்பிரச்சினைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தீர்த்துவைத்தது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவின்போது, மலையின் உச்சியில் ஏற்றப்படுகிற கொப்பரைத் தீபம் என்பது இன்றியமையாத ஒன்று. சான்றோர்கள் காலத்தில் இருந்து நடைபெறும் இந்த விழா தடைபடக்கூடாது என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அந்த உத்தரவின்படி, புவியியல் நிபுணர் குழு சரவணபெருமாள்ராஜா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 8 பேர் கொண்ட அந்த குழு கடந்த 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மூன்று நாட்கள் ஆய்வு செய்துள்ளனர்.
அந்த ஆய்வு அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 350 கிலோ எடை கொண்ட கொப்பரை மற்றும் திரிகளை மேலே எடுத்துச் செல்ல வேண்டும். 40 டன் கொண்ட சுமார் 450 கிலோ நெய்யும் மேலே எடுத்துச் செல்ல வேண்டும். எனவே இந்த இரண்டு பணிகளுக்கும் சேர்த்து எவ்வளவு மனித சக்தி அதற்கு பயன்படுத்த வேண்டுமோ, அத்தனை பேரை பயன்படுத்தி, எந்தவித அசம்பாவிதமும் நேராமல், தீபத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். எனவே, சூழ்நிலைக்கு ஏற்றதுபோல மனித சக்தியை பயன்படுத்தி தீபத்திருவிழா நடத்தப்படும்.” என்று பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT